ஹிந்தி படமான "3-idiots"-இன் அச்சு மாறாத காப்பி. தமிழுக்காக மாற்றப் பட்ட பாத்திரப் படைப்புகளின் பெயர்கள் மற்றும் பாடல்கள் தவிர்த்து, நுண்ணோக்கி வைத்துப் பார்க்க வேண்டிய சொற்ப இடங்களில் மட்டுமே இயக்குனர் சங்கரின் வித்தியாசங்களைப் பார்க்கலாம். உதாரணத்துக்கு ஒன்று. காதல் வந்தால் என்ன உணர்வு தோன்றும் என்று விஜய் வருணிக்க, ஹீரோயின் இலியானா "இது ஷங்கர் பட கிராபிக்ஸ்ல தான் நடக்கும்" என்று சொல்வார். ஆனால் ஹிந்தி படத்தை விட சிறப்பாக தர முடியாது என்பதால் காட்சி, காமிரா கோணம் எல்லாவற்றையும் அப்படியே தந்திருக்கிறார். (நாம் நினைத்தது போலவே விஜய் டி.வீ நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் இந்தத் தகவலை சொல்லி இருக்கிறார். திரைக்கதையை ஹிந்தி மூலத்தில் இருந்து அப்படியே தரவேண்டும் என்றும் சின்ன நுணுக்கம் கூட மாறி போகக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்ததாக சொல்லுகிறார்.)
கதை தொடங்கும் முன் சில தகவல்கள்: நண்பன், ஹிந்தி "3-idiots"-இன் தழுவல் என்று சொல்லிவிட்டோம். "3-idiots"-இன் கதை எழுதியவர் அபிஜத் ஜோஷி மற்றும் ராஜ்குமார் ஹிரானி. திரைக்கதை எழுதியவர்கள் அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் விது வினோத் சோப்ரா. இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. இவர்களுக்குத் தான் அத்துனை பாராட்டுகளும், புகழும் போய்ச் சேரும். ஹிந்தி படத்துக்கு மூலம் பிரபல எழுத்தரான சேத்தன் பகத் எழுதிய "Five Point Someone – What not to do at IIT!" என்கிற புத்தகத்தையே சேரும். எண்ணம் மற்றும் பிள்ளையார் சுழி போட்டு மூலக்கதை எழுதிய இவரே எல்லா பாராட்டுக்கும் உரியவர் (அப்பாடா...மறக்காம சொல்லிட்டேன்..!)
சங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீக்காந்த், சத்தியராஜ், சத்யன் என்று முக்கிய நடிகர்கள் இதில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இலியானா தான் நாயகி. தவிர வாலி குஷி தந்த S.J. சூர்யா ஒரு சிறு கதாபாத்திரத்தில் வருகிறார். மில்லிமீட்டர் என்கிற பாத்திரத்தில் வருகிற இளைஞர் கவர்கிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். 'என் நண்பன் போல யாரு மச்சி' பாடல் படம் முடிந்து பல மணி நேரம் நம் காதுகளில் ஒலிக்கிறது.
கதை என்னவோ விஜய், ஜீவா & ஸ்ரிக்காந்தை சுற்றி சுற்றி நகர்ந்தாலும் சத்தியராஜ் & சத்யனின் நடிப்பு பிரமாதம். "வைரஸ்" என்று மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரின்சிபால் விருமாண்டி சந்தனம் என்கிற பாத்திரமாக வழுக்கை தலையும் பெரிய கண்ணாடியுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சத்தியராஜ். உலகமே போட்டி தான், இரண்டாவது இடம் என்பது தோல்வி, முதல் இடம் தான் வெற்றி என்கிற கொள்கை உடையவர் இந்த விருமாண்டி சந்தனம். இவரை இவருடைய கொள்கைகளால் நாம் வெறுக்கும் விதமாக பாத்திரம் சித்தரிக்கப் பட்டாலும் சத்யராஜை நம்மால் வெறுக்க முடியவில்லை, அது சின்ன சறுக்கல் தான். நாசர் இன்னும் பொருத்தமான தேர்வாக இருந்து இருக்குமோ ( எம்டன் மகன் படத்தை பார்க்க) என்று தோன்றுகிறது. சத்யராஜை இரண்டாவது இடத்துக்கு தள்ளி நடிப்பில் முதல் இடத்துக்குத் தாவி இருப்பவர், ஸ்ரீவத்சன் என்கிற பெயரும் "சைலன்சர்" என்கிற பட்டப் பெயரும் கொண்ட பாத்திரமாக வரும் சத்யன். உருப் போட்டு (மக் அடித்து, கடம் அடித்து, மனப் பாடம் செய்து) 'படித்து' மார்க் வாங்கி நல்ல பெயர் வாங்கும் முதல் பெஞ்ச் மாணவன் பாத்திரம் இவருக்கு. படத்தில் ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கப் பட்டு இருக்கிறது. உதாரணமாக எதற்கெடுத்தாலும் விலை சொல்லும் பாத்திரம் ஒன்று; "Mr. Price Tag" ("விலை ஸ்டிக்கர்" என்று தமிழ்(?) படுத்தி சொல்லலாம்) என்று பெயர் வைத்து இந்த 3 நண்பர்களும் கூப்பிடும் பாத்திரம் ஒன்று நாம் பல சமயங்களில் பார்க்கிற ஒன்று. தனது காலணி மீது சட்னி கொட்டிவிட "என்னோட 300 டாலர் ஷூ மேல சட்னி கொட்டிடீயே" என்று கத்துகிறது. இப்படி சின்ன சின்ன விஷயங்களை ரசிக்கும் விதமாக செய்திருப்பது கதாசிரியரின் திறமை.
வெங்கட்ராம கிருஷ்ணன் (ஸ்ரீக்காந்த்) பிளேனில் உட்கார்ந்து இருக்கிறார், பிளேன் கிளம்பப் போகிறது. அந்த சமயத்தில் அவருக்கு ஒரு போன் வருகிறது. பிளேனை நிறுத்தி இறங்கி தான் நண்பனான சேவற் கொடி செந்தில் (ஜீவா) க்கு போன் அடிக்கிறார். விஷயம் கேட்டு பேன்ட் கூட போடாமல் ஓடி வருகிறார் செந்தில். இவர்களை கூப்பிட்டது ஸ்ரீவத்சன் என்கிற சைலேன்செர். அவரை பார்க்க அவர்கள் காலேஜ் வாட்டர் டாங்குக்கு வர சொல்கிறார், பாரி என்கிற இவர்களது நண்பன் "பஞ்சவன் பாரி வேந்தன்" (விஜய்) அங்கு வருவார் என்று நினைத்து அலறி அடித்து அங்கு செல்கிறார்கள் இவர்கள். அங்கே சைலேன்செர் மட்டும் தான் இருக்கிறான். தான் தற்போதைய வீடு, கார் என்று வசதியாக வாழ்வதை காட்டி தான் 10 வருஷத்துக்கு முன் போட்ட பந்தயத்தில் ஜெயித்து விட்டதாக சொல்கிறார். இவர்கள் அதை பெரிதாக எடுக்கும் நிலையில் இல்லை. பாரி எங்கே என்று கேட்கிறார்கள். பாரி ஊட்டியில் இருப்பதாக சொல்கிறான் சைலேன்செர். அவனுடைய காரில் ஏறி ஊட்டி நோக்கி செல்கிறார்கள்.
பிளாஷ் பேக் தொடங்குகிறது: "IEC" (IIT போல சொல்கிறார்கள்) என்கிற யாருக்கும் கிடைக்காத காலேஜ், முதல் நாள், சீனியர்கள் ராக்கிங் செய்கிறார்கள். பாரியை ஒன்றும் செய்ய முடியவில்லை அவர்களால். ஐந்தாங் கிளாசில் படித்த ஒரு சின்ன விஷயத்தால் சீனியர்களை மடக்கி விடுகிறான் பாரி. அவன் தான் இவர்களுடைய ரூம் மேட். கொஞ்ச நாளில் இவர்கள் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள். செந்திலின் அப்பா உடம்பு சரி இல்லாமல் சீரியஸ் ஆக இருக்க பாரி புத்திசாலித் தனத்தால் அவரை காப்பாற்றுகிறான். பாரிக்கும் உலகமே போட்டி மேடையாக நினைக்கும் சந்தானத்துக்கும் அடிக்கடி மோதல் வருகிறது. அவர் நண்பர்களை பிரிக்க எண்ணுகிறார். அதை தாண்டி நட்பு இறுகுகிறது.
ஊட்டிக்கு கார் செல்கிறது. பாரியின் வீட்டுக்கு போகிறார்கள். ஆனால் பாரி (S.J. சூர்யா) என்று சொல்பவர் வேற ஆள். பாரியின் காலேஜ் போட்டாவில் இவர்கள் இருக்கிறார்கள், இவர்களது நண்பன் பாரிக்கு பதில் இந்த பாரி இருக்கிறார். மிரட்டி கேட்ட பிறகு தெரிகிறது: பாரியாக வந்தது இவரது வீடு வேலைக்காரறது பிள்ளை, அவனை "பப்பு" என்று கூப்பிடுவார்கள். பாரிக்கு பதில் பப்பு படிப்பான் என்றும், அதற்க்கு அப்பறம் இவன் காலேஜ் சம்பந்தப் பட்ட யாரோடும் தொடர்பு வைக்க கூடாது என்றும் கண்டீஷன். பப்பு இப்போது தனுச்கொடியில் இருக்கிறான், ஸ்கூல் வாத்தியாராக. சைலேன்செர் ரொம்ப சிரிக்கிறான். தான் மேல் நிலையில் இருப்பதும், பப்பு வாத்தியாராக போய் விட்டதும் தான் காரணம். பஸப்புகழ் என்கிற சயன்டிஸ்ட் உடன் ஒரு ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் அது முடிந்தால் இவனை கையிலேயே பிடிக்க முடியாது என்றும் சொல்கிறான். பஸப்புகழ் என்கிற அறிஞ்சரை உலகம் வியக்கிறது என்றும் அவரை பார்பதற்காக தான் இந்திய வந்ததாகவும் சொல்கிறான் சைலன்சர். அவனை கட்டி காருக்குள் போட்டு விடுகிறார்கள் நண்பர்கள்.
கார் தனுஷ்கோடி நோக்கி செல்கிறது. மீண்டும் பிளாஷ் பேக். பாரி இவர்கள் நினைத்ததை அடைய உதவி செய்கிறான். வெங்கட் வன விலங்குகளை படம் பிடிக்கும் போட்டோகிராபராக வர எண்ணுகிறான், அப்பாவிடம் பேச தயக்கம். செந்தில் பயந்து சாகிறான் எதற்கெடுத்தாலும். பாரி இவர்களுடைய இந்த குணங்களை மாறி அவர்கள் நல்ல நிலையை அடைய வைக்கிறான். தான் அறிவாலும் நல்ல எண்ணத்தாலும் சந்தனத்தின் மனதை வெல்லுகிறான். அவர் மகள் ரியா (இலியானா) மேல் இவனுக்கு காதல். மன மேடையில் இருந்து பப்புவுக்காக அவள் வெங்கட் & செந்தில் கூட வருகிறாள் இவனை பார்பதற்காக.
பப்பு அங்கே இருந்தானா, ரியாவை கை பிடித்தானா, சைலன்செரை எப்படி சமாளித்தான் என்பதை வெள்ளித் திரையில் காண்க.
("இல்லீன்னா கொஞ்ச நாள் கழிச்சி இங்க வா, தல...கிளிமாக்ஸ் வர கதய நா சொல்றேன்" )
ஆனால் ஒரு மிகத் தரமான (ஹிந்தி) படத்தை அப்படியே தமிழ் ரசிகர்களுக்கு சேர்த்ததற்காக இயக்குனருக்கு நமது பிரமு இணையம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது. உங்களது கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.