Memories

Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Sunday, December 29, 2013

சமீபத்தில் ரசித்த படம் (ஹிந்தி) - ஸ்பெஷல் 26




படம் தொடங்கியதில் இருந்து ஒரே விறுவிறுப்பு தான். சப்-டைட்டில் வைத்து பார்த்ததால் கொஞ்சம் புரிஞ்சது.

சிபிஐ அதிகாரிகளாக அக்ஷய் குமாரும், அனுபம் கேர்-ரும் இண்டர்வீயு செய்வதில் தொடங்குகிறது படம்.

அங்க கட் செஞ்சி திடீர்னு மந்திரி வீட்டுக்கு சிபிஐ ரெயிட் போறா மாதிரி வருது அப்பறம். அனுபம் கேர்-க்கு லஞ்சம் கொடுக்க ட்ரை பண்றார் மந்திரி - '2 தரட்டுமா?' அப்படி கேக்கறார் மந்திரி …அதுக்கு இரண்டு அடி கொடுக்கிறார் அனுபம் - 'நேர்மை தான் உயிர் மூச்சு, நேர்மைனா டிக்சனரீல என் பேர் தான் மீனிங்கா போட்ருபாங்க' அப்படீங்கற மாறி பேசறார். சரியான சீரியஸ் படமாக்கும் அப்படீன்னு நெனைக்கும்போது தான் தெரியுது அக்ஷய் குமாரும் அனுபம் கெர்ரும் டுபாக்கூர் அப்படீன்னு. இவங்க கொள்ளை அடிக்கறதுக்கு ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கூட கிடையாது - ஏன்னா இவங்க CBI , இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் மாதிரி பணக்காரங்க வீட்ல ரெயிட் செஞ்சு கருப்பு பணம் எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க.

கடைசீயா, பெருசா ஒரு கொள்ளை அடிக்க திட்டம் போடுது இந்த கும்பல். இவங்கள ரொம்ப க்ளோசா    வாட்ச் பண்றாங்க உண்மையான CBI. அவங்க பாத்திட்டு இருக்கும்போது அவங்க கண்ல மண்ணை தூவி கொள்ளை அடிச்சிட்டு போகுது இந்த கும்பல்.

"A  wednesday" (தமிழில் உன்னைப் போல் ஒருவன்) எடுத்த டைரக்டர் எடுத்த படம் இது.  1980கள்ல  நடந்த உண்மை சம்பவங்கள பின்புலமா வச்சி இந்த படம் எடுத்ருக்கார். அக்ஷய் குமார், காஜல் அகர்வால் காதல் இருந்தாலும், ஒரே ஒரு பாட்டில் அந்த காதலையும் ரொம்ப  அழகா காமிச்சதுக்கு டைரக்டருக்கு ஒரு சபாஷ் போடலாம். மரத்த சுத்தி டூயட் இல்ல, குத்து சாங் இல்ல.

"அட" சொல்ல வைக்கர மாதிரி நெறைய சீன்கள்: ஒரு  கட்டத்தில இவங்க ரெயிட் போற இடத்தில நிஜமான CBI  இருக்க சட்டுன்னு இவங்க அட்ரஸ் மாறி வந்ததா சமாளிக்கறது, யாரு அந்த ஸ்பெஷல் 26 அப்படீங்கறது, இன்னும் சொல்லிட்டே போகலாம்.
 



Sunday, January 13, 2013

சமீபத்தில் ரசித்த படம் - கும்கி




வழக்கமான காதல் கதை போல இல்லாமல், வித்தியாசமான காதலையும் ஒரு யானை பாகனுக்கும் அவனுடைய யானைக்கும் உள்ள பாசப் பிணைப்பையும் காட்டில் வாழ்ந்தாலும் கட்டுப் பாடாக வாழ்கிற மனிதர்களுடைய உணர்வுகளை அற்புதமாக சொன்ன இயக்குனர் பிரபு சாலமன் நம் மனத்தில் உயர்ந்து நிற்கிறார்.

பொம்மனாக விக்ரம் பிரபு, நடிகர் பிரபுவின் மகன். அங்கங்கே பிரபுவின் முகச்சாயல் தெரிந்தாலும் நெடு நெடுவென ஒல்லியாக வருவதாலோ என்னவோ பிரபுவை நியாபகப் படுத்தவே இல்லை. அல்லியாக வருபவர் லட்சுமி மேனன் - இந்த வருடத்தின் கவனிக்கத் தக்க புது முகம். சிலருக்கு இவர் இப்பவே கனவு கன்னியாக ஆகிவிட்டார். தம்பி ராமையா நடிக்கிற கொத்தல்லி என்கிற கதா பாத்திரம், படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதோடு, படத்தின் பிற்பாதியில் சிறந்த குண சித்திர நடிப்பைத் தந்து நெஞ்சில் நிறைகிறது. நகைசுவையில் அங்கங்கே வடிவேலுவின் பாதிப்பு நன்கு தெரிகிறது என்றாலும் குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தும் இடங்களில் தம்பி ராமையா தனித்து தெரிகிறார். உண்டியல் என்கிற பாத்திரத்தில் வருகிற நடிகர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பத்தாம் வகுப்பு டுடோரியல் காலேஜில் படிக்கிற பையனாக வருபவர் ("'சிங்கக்குட்டி' அழக்  கூடாதப்பா")...நியாபகம் வந்து விட்டதா? எல்லாரையும் பின் தள்ளி மனதில் நிறைகிறது மாணிக்கம் என்கிற பெயரில் வரும் யானை. வனத்துறை அதிகாரிகளாக வரும் இருவரும், அல்லியின் தந்தை மற்றும் சித்தப்பாவாக (ஜூனியர் பாலையா) வரும் இருவரும் காட்டுவாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

திரை கதையில் மிஞ்சி விட்டார் பிரபு சாலமன். கொம்பன் என்கிற யானையை கதைக்குள் கொண்டு வரும் விதம், அதை நினைவுக்கு கொண்டு வரும் வகையிலும், திகில் தரும் விதத்தில் அமைத்திருக்கும் பல காட்சிகள் சூப்பர். ஆதி காட்டை திரையில் காட்டும் பல காட்சிகள் கிராபிக்ஸ் என்றாலும் அருமையாக தந்திருக்கிறார் பிரபு சாலமன்.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை இன்னும் சிறப்பாக தந்திருக்கலாம், சில காட்சிகளை திரும்ப திரும்ப வருவது போல காட்டுவதற்கு பதில் வேறு கோணங்களில் தந்திருக்கலாம். படத்தில் கிளைமாக்ஸ்கு முன் வரும் பாடல் மற்றும் சாதாரண மற்ற படங்களை நினைவு படுத்துகிறது. மற்ற எல்லா காட்சிகளும் ரொம்பவும் வித்தியாசமானவை.

பலவித கதாபாத்திரங்கள் [மனிதர்கள் மற்றும் மிருகங்கள் ] மற்றும் அவர்களுடைய உணர்வுகள் படத்தின் கதைக்களத்தில் இயல்பாக கலக்கும்போது உருவாகும் கூட்டாஜ்சோரை விருந்தாகப் படைத்திருக்கிறார் இயக்குனர். தன்  சினிமாத் தனத்தில் இருந்து மாறி நல்ல படைப்புக்களை உருவாக்கும் தமிழ் சினிமாவின் இந்த மாற்றம் ரொம்பவும் நல்லது, இது தொடர வாழ்த்துகிறோம்.

இசை இம்மான். பின்னணி இசையில் பல இடங்களில் மிரட்டுகிறார். காதல் சொல்லுகிற இடங்களில் மயக்குகிறது பின்னணி இசை. 'சொல்லிட்டாளே  அவ காதல", "அயய்யோ ஆனந்தமே" பாடல்கள் தாலாட்டுகின்றன.


Sunday, December 30, 2012

சமீபத்தில் ரசித்த படம் - துப்பாக்கி



ரமணா, கஜினி மற்றும் 7-ஆம் அறிவு தந்த இயக்குனர் முருகதாஸ் கொடுத்திருக்கும் ஒரு விறு விருப்பான படம், நல்ல பொழுது போக்கு தந்த இயக்குனருக்கு நன்றிகள். சந்தோஷ் சிவனின் காமிரா அருமை, காட்சிகளுக்கு ஆழத்தை கொடுத்திருக்கிறது.

ஹீரோ "இளைய தளபதி" விஜய் வழக்கமான படி பில்ட்-அப் காட்சியில் அறிமுகமாகிறார். ராணுவத்தில் இருந்து  லீவில் வரும் காப்டனாக வருகிறார்.அவசர அவசரமாக ராணுவ சீருடை கூட மாற்றாமல் பெண் பார்க்க சென்று காஜல் அகர்வாலை பெண் பார்த்து ரிஜக்ட் செய்கிறார் (மோதலில் தானே காதல் வர வேண்டும்!). காமடிக்கு சத்யன் மும்பை போலீசாக வருகிறார். மொத்த கதையும் மும்பையில் தான் நடக்கிறது, நம்ம முருகதாஸ் தான் இந்தி இயக்குனர் ஆயிடாரே!

காப்டன் ஜகதீஷ் (விஜய் தான்) தன் நண்பன் பாலாஜி (சத்யன்) கூட பெண்கள் குத்துசண்டை பார்க்கும் படி ஆகிறது.அங்கு காஜல் அகர்வால் தான் குத்து சண்டை வீராங்கனை. காஜல் தன்னை எதிர்த்து போட்டியிடும் இன்னொரு வீராங்கனையை நாக்-அவுட் செய்ய விஜய்  காதலில் நாக்-அவுட் ஆகிறார். விஜய் தற்செயலாக ஒரு குண்டு வெடிப்பை பார்க்க நேரிடுகிறது, அதற்க்கு காரணமான ஸ்லீப்பர்-செல் ஆளை பிடித்து போலீசிடம்ஒப்படைக்கிறார். அங்கிருந்து தொடங்கும் விறுவிறுப்பு கடைசி வரை போகிறது.

விஜயின் உயர் அதிகாரியாக ஜெயராம் வருகிறார். காமடியில் சத்யனுக்கு ஒத்தாசை செய்கிறார். விஜயின் சாகசங்கள் தெரியாமலேயே கடைசியில் ரயில் ஏறுகிறார். வீணடிக்கப் பட்ட கதாபாத்திரம் இது. இவருடன் பேசுகையில் ஓவர் ஆக்டிங் செய்வதை தவிர்த்து இருக்கலாம். கதையின் துவக்கத்தில் வரும் மனோபாலா காஜல் அகர்வாலின் தந்தையாக வந்து ஒரு சீனுடன் காணாமல் போகிறார். விஜய்க்கு ஒரு பக்கம் காஜலுடன்  காதல் மறு பக்கம் தீவிரவாதிகளுடன் மோதல் என வேகமாக கதை நகருகிறது.

 விறு விருப்பான படமாக இருந்தாலும், லாஜிக் ஓட்டைகள் நிறைய: 
1. பல நாட்களாக கடத்தி வைக்கப் பட்ட ஸ்லீப்பர்-செல் ஆள் கைகட்டு அவிழ்க்கப் பட்டு தப்பி ஓட வசதியாக வைக்க பட்டிருப்பது, அவனுக்கே சந்தேகம் வர வைக்காதா? அவன் இங்கிலீஷ் படமே பாத்திருக்க மாட்டான் போலிருக்கிறது.
2. பல நாள் மயக்கத்தில் இருந்த ஸ்லீப்பர் செல் ஆள் வெளியே நடந்து ஒவ்வொரு இடத்துக்கு சென்று திட்டமிட்ட படி ஒவ்வொருத்தரிடமும் பேசுகிறான். இவனுடைய தலைவனாக வருகிறவன் இவன் கடத்தப் பட்ட விஷயத்தை யாரிடமும் சொல்ல வில்லை போல.
3. மிலிட்டரி இன்டலிஜன்ஸ் என்று சொல்லிக் கொள்ளும் விஜய் ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படையாக தான் அது தான் என்று சொல்லிக்கொள்ளும்படி நடப்பது நம்பும்படி இல்லை. இவருடைய உயர் அதிகாரியான ஜெயராம் தவிர மற்ற எல்லாருக்கும் இவர் பற்றி தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
4. விஜய் தன்னுடைய டீமிடம் ஒரு 12 பேரை தீர்த்து கட்ட வேண்டும் என்று சொன்னதும், லீவில் வந்திருக்கும் எல்லாரும் ஒரு கேள்வி கூட கேட்டகாமல், விஜய் அவர்களுக்கு கொடுக்கும் துப்பாக்கியை எடுத்து சென்று எல்லரையும் தீர்த்து கட்டுவதும் லாஜிக்உதைக்கிற  மேட்டர்.
5. நாய் குலைத்தவுடன் வில்லனுக்கு தெரிந்து விடுகிறது ஹீரோ வந்து விட்டார் என்று. அதுவும் பொம்பிளை பிள்ளைகளை காப்பாத்த நேரத்துக்கு வந்து தானே ஆக வேண்டும். நிறைய தமிழ் படம் பாத்திருக்கிறார் வில்லன்.
6. கிளைமாக்ஸ் கப்பலில் தான் நடக்கும் என்று தெரிந்து இருக்கிறது விஜயை பின் தொடர்பவருக்கு. அதற்க்கு தயாராக வந்திருக்கிறார். 
7. ஒரு வெடிகுண்டில் அவ்வளவு பெரிய கப்பல் தீப்பிளம்பாக காணாமல் போவது சாத்தியமா? அணு குண்டு வைத்து தகர்த்திருப்பார்களோ?
8. யாருக்கும் தெரியாமல் தான் மிலிட்டரி இன்டலிஜன்ஸ் என்று சொல்லி சில தற்கொலைகளுக்கு காரணமாகிறார் விஜய். எப்படி வீடுகளுக்கு உள்ளே சென்றார், கள்ள துப்பாக்கி கொண்டு செல்கிறார், தற்கொலைக்கு அப்புறம் தப்பித்து வருகிறார். இயக்குனருக்கே வெளிச்சம்.
9. வீட்டுக்குள் சில தீவிர வாதிகளை குண்டு கட்டாக ஒத்தை ஆளாக தூக்கி கொண்டு வருகிறார், யாருக்கும் தெரியாமல் வைத்து இருக்கிறார், தப்ப விடுகிறார் அல்லது தூக்கி சென்று எங்கோ போடுகிறார்...எப்படி சாத்தியம்? விஜய்க்கே வெளிச்சம் (இயக்குனருக்கு ஏற்க்கனவே வெளிச்சம் போட்டாச்சுப்பா)


யாருக்காவது பதில் தெரிந்தால், திருத்தங்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா...

Sunday, July 22, 2012

சமீபத்தில் ரசித்த படம்: பாட்ஷா


எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது; ஆனாலும் இன்னும் ஒரு முறை கூட பார்க்கலாம் என்று தோன்றுகின்ற  படம்.

சுரேஷ் கிருஷ்ணாவின் திரைக்கதை இயக்கத்தில் வேறு எந்த படம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு படம் மட்டும் அவ்வளவு அட்டகாசம். வசனங்கள் எழுதியது பாலகுமாரன்; "நான் ஒரு தடவை சொன்னா  நூறு தடவை சொன்ன மாதிரி " இவரா எழுதினார்? தெரியவில்லை.

துவக்கம் சாதாரணம் தான்; கொஞ்சம் பில்ட்-அப்  சீன்கள் ரஜினிக்காக. பின் ஒரு பாடலுடன் வருகிறார் ரஜினி. பேப்பர் தூவ நிறைய வாய்ப்புகள் தரப்படுகின்றன. அப்பா இல்லாத ஒரு தம்பி, இரண்டு தங்கைகள் மற்றும் அம்மாவை பார்த்துக் கொள்ளும் அண்ணன் ரஜினி. ஆட்டோ ஓட்டுகிறார். அடிதடி என்றால் அவ்வளவு பயம் அவருக்கு. நக்மாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஹீரோயின் வேண்டுமே... நக்மா கவர்ச்சி ஹீரோயின் பாத்திரத்துக்கு மிகவும் பொருந்துகிறார். 

மூத்த தங்கைக்கு அவர் விரும்பிய வரனை கலியாணம் செய்து வைக்கிறார். ஆட்டோ காரன் தங்கைக்கு தன மகனை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லும் பணக்காரனுக்கு பணம் முக்கியம் இல்லை என்பதை உணர்த்தி நல்ல படியாக திருமணம் செய்கிறார்.

தன் தம்பி இன்ஸ்பெக்டர் வேலைக்காக இன்டர்வியு போக போலிஸ் உயர் அதிகாரி மாணிக்கம் என்கிற ஆட்டோ டிரைவர் ரஜினியை பார்க்க வேண்டும் என்கிறார். ரஜினி பார்க்க செல்ல இவரை பார்த்ததும் போலிஸ் அதிகாரி எழுந்து நின்று மரியாதை செய்கிறார். அதற்க்கு முன் நெகடிவாக சில பழைய காட்சிகள் ஓடுகின்றன.

அவருடைய தங்கைக்கு மெடிக்கல் காலேஜ் சீட் கிடைக்காமல் போக ரஜினி அங்கு சென்று அந்த காலேஜ் அதிபருடன் பேசுகிறார். பேசி முடித்தவுடன் தங்கைக்கு சீட் கிடைக்க தங்கையின் கேள்விக்கு ரஜினியின் பதில்: "உண்மையை சொன்னேன்". கல்லூரி அதிபர் தன அடியாட்களுக்கு சொல்லும் பதில்: " தங்கச்சிக்கு அண்ணன்னா நமக்கெல்லாம் அண்ணன்...ஊருக்கே அண்ணன்டா...அன்ன்ன்னன் டா'

இந்திரன் என்கிற ரவுடி தன் தம்பியை அடிக்காமல் தடுக்க இவர் கம்பத்தில் கட்டப்பட்டு அடிக்கப் படுகிறார். ரத்தம் சிந்த சிந்த அவன் ரஜினியை அடித்து துவைக்க ஒரு எதிர்ப்பு காட்டாமல் வாங்கி கொள்கிறார். ஆனால் தன தங்கை அந்த ரவுடியால் ஒரு துளி ரத்தம் சிந்தும் போது அந்த ரவுடியையும் அவன் கும்பலையும் த்வம்சம் செய்கிறார் தனி ஆளாய். பின் இந்திரனை கம்பத்தில் வைத்து கிழித்து எடுக்கிறார்.

பின் "உன்ன இந்த பக்கம் மறுபடியும் பாத்தேன்..பாத்த இடத்திலேயே குழி தோண்டி பொதைசுடுவேன்.." இங்கிருந்து தான் 'நான் ஒரு தடவை சொன்னா" வசனம் வருகிறது.  இதுக்கு பின்னால் ரஜினியின் பிளாஷ் பேக்
அவர் மும்பையில் மாணிக் பாட்சா-வாக மார்க் அன்டனி என்கிற ரகுவரனுடன் மோதிக் கொண்டு இருந்ததும், மார்க் அன்டணியை ஜெயிலில் அடைத்து விட்டு இறந்து விட்டதாக உலகத்தை நம்ப வைத்து விட்டு சென்னை வந்திருப்பதும் தெரிகிறது. 

நக்மாவின் கல்யாண தினத்தில் தன் பட்டாளத்துடன் போய் அவரை கூட்டி வர விஷயம் தெரிந்து தப்பித்து வருகிறான் மார்க் அன்டனி. மீண்டும் சண்டை..


போலிஸ் ரகுவரனை கொன்று எல்லாம் சுபம். பல காட்சிகள் சூப்பர் என்று சொல்ல வைக்கும். நக்மாவின் அப்பா கேசவன் என்கிற காரக்டர் 'மார்க் அன்டனி தப்பித்தான்' என்று செய்தி வாசித்து பாப்பரை மடக்கும் போது மார்க் அன்டனி எதிரே இருக்கும் காட்சி. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா' என்று தான் ஏற்பாடு செய்த ஆட்கள் துப்பாக்கி சகிதம் மார்க் அன்டணியை குறி வைத்திருப்பதை ரஜினி காட்டும் காட்சி. "உள்ளே போ" காட்சி போன்ற மேலே விவரித்த காட்சிகள் அருமையிலும் அருமை. எட்டு எட்டா பாடல் தத்துவம். நீ நடந்தால் பாடல் இனிமை. எங்கிருந்து உருவாக்கினாரோ தேவா  பாடல்கள் எல்லாம் சிறப்பு. இஸ்டையில் பாட்டு உற்சாகம்.

மொத்தத்தில் இன்னும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். 


Saturday, March 10, 2012

சமீபத்தில் ரசித்த படம் - அழகன்

பாலச்சந்தரின் அழகான படம். உழைப்பால் உயர்ந்த அழகப்பன் என்கிற ஹோட்டல் முதலாளி, மம்மூட்டி, மூன்று பெண்களின் நடுவில் சிக்கி சின்னா பின்னாகி பின் எல்லாம் சுபமாக முடிவது தான் படம்.


"அவன் தான் அழகன்" பாடல் சுகம் என்று பார்த்தால் எல்லா பாடல்களும் முன்னதை விட சூப்பராக இருக்கின்றன. இதற்காக இசையமைப்பாளர் மரகதமணிக்கு ஒரு சபாஷ்.

மனைவியின் இறப்புக்கு பிறகு வேறு யாரையும் திரும்பி பார்க்காத இவர் மேல் பதினெட்டு வயது "குயின் மேரிஸ் காலேஜ் குயின்" என்று சொல்லிக்கொண்டு வரும் சொப்னா (மதுபாலா), டுடோரியல் காலேஜ் டீச்சர் கண்மணி (கீதா), நடன கலைஞர் பிரியா (பானுப்ரியா) ஈர்க்கப்படுகிறார்கள். அதனால் வரும் குழப்பங்கள் தான் கதை. கதை திரைக்கதை இயக்கம் பாலசந்தர், டி.வீ. நாடகம் போலத் தோன்றி விடாமல் படத்தை நன்றாக கொண்டு போயிருக்கிறார்.   


மதுபாலாவுக்கு இது முதல் படம், ஆனால் நடிப்பில் குறும்பு கொப்பளிக்கிறது. சும்மா பின்னி பெடலெடுத்து இருக்கிறார். பானுப்பிரியா ஹோட்டலுக்கு வர அவரிடம் ஹோட்டல் மெனுவை  மம்மூட்டி ஒப்பிக்கும் காட்சி சூப்பர்மம்மூட்டிக்கு நான்கு குழந்தைகள். 'நாம வேற வீட்ல போய் பிறந்திருக்கலாண்டா' என்று சொல்லும் சிறுவன் நடிப்பு சிறப்பு.  போட்டோ-வில் அம்மாவின் முதுகு தெரிவது பார்த்து ஒரு குழந்தை போட்டோவின் பின் பக்கம் போய் முகம் பார்க்க முயல்வது சூப்பர்.  ஒரு இடத்தில் மம்மூட்டி பேசும் வசனம் இது: "நான் சொல்றேன் நீ கேட்டுக்கோ..ஆனா டான்ஸ் ஆடிக்கிட்டே பேசத் தெரியாதெனக்கு.." சீரியசான இடத்திலும் சிரிப்பு வரும் நமக்கு. 


படத்தில் பல சின்ன பாத்திரங்கள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. சந்தானம் என்கிற டிரைவர், வீட்டு வேலைக்காரராக வரும் பிருதிவி ராஜ், அதிராமப் பட்டினம் சொக்கு என்கிற கோள்மூட்டும் பாத்திரம் (மூன்று பெண்களுக்கும் இடையில் போட்டியையும் குழப்பத்தையும் மாறி மாறி ஏற்படுத்துகிறது), பானுப்பிரியாவின் அப்பா, அம்மா, மதுபாலாவின் பாட்டியாக வரும் சாவ்கார் ஜானகி. டெலிபோன் கூட ஒரு முக்கிய பாத்திரமாக மாறி இருக்கிறது. ஒரு பாடலில் பானுப்ப்ரியாவும் மம்மூட்டியும் இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள்: "சங்கீத ஸ்வரங்கள்" என்கிற பாட்டு சூப்பரோ சூப்பர். தூர்தர்ஷனில் வளையம் வரும்போது வரும் இசையையும் பாடலில் சேர்த்திருப்பது அருமை,  இதை படமாகிய விதம் மிகவும் அருமை.




சில சமயம் மம்மூட்டி ஹோட்டலை கவனிக்கறாரா இல்லை இந்த மூன்று பெண்களை மட்டும் கவனிக்கறாரா என்று நினைக்க தோன்றுகிறது. இயக்குனர் கொஞ்சம் கதையை நீட்டி இருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. 


இன்றும் கூட பார்க்கலாம், ரசிக்கலாம் என்கிற வகையில் படம் இருப்பது தான் இயக்குனரின் வெற்றி. சிறந்த படம்.


Saturday, February 11, 2012

சமீபத்தில் ரசித்த படம்: கன்னத்தில் முத்தமிட்டால்




மணிரத்னம், A. R. ரகுமான், மாதவன், நந்திதா தாஸ், சிம்ரன், பிரகாஷ் ராஜ், பசுபதி என்று ஒரு சிறந்த அணியின் படைப்பு சிறப்பாகத் தான் இருக்க முடியும். ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ரொம்பவும் வித்தியாசமான கதை. பிரச்னை தான் கதையின் களம், ஆனால் அதை தொட்டுக் கொள்ளாமல் ஊடே பயணிக்கிறது; அமுதா என்கிற குழந்தை அவளுடைய உண்மைத் தாயான ஷ்யாமா என்கிற இலங்கையின் மாங்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்ணைத் தேடும் பிரச்சனையை சொல்லுகிறது. படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்கு யாழ்ப்பாணத் தமிழ் மணக்கிறது.

டாக்டர் ஹெரால்ட் விக்கிரமசிங்கே என்ற சிங்களவராக ஆக வரும் பிரகாஷ்ராஜ் அருமை, அமுதாவுக்கும் அவருக்கும் வரும் உரையாடல்கள் மிகவும் அருமை. கடைசி காட்சியில் காமிரா எல்லாருடைய முகத்துக்கும் மாறி மாறி செல்லும் போது எல்லாருடைய நடிப்பும் தெரியும், அருமையாக செய்திருக்கிறார்கள். அமுதாவாக வரும் கீர்த்தனா கலக்கி (அதாவது நன்றாக செய்து) இருக்கிறார்.  நந்திதா தாஸ் பற்றி சொல்லவே வேண்டாம். A. R. ரகுமான் என்று சொல்லி விட்டோம், அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது. 
    
சின்ன சின்ன காட்சிகள் கூட தத்ரூபமாக வருகிறது. சிமரன் மூன்று குழந்தைகளுக்கு தாயாக வருகிறார். குழந்தைகளை பார்க்கும் தாயை தத்ரூபமாக பிரதிபலிக்கிறார். துணிகளை எடுத்து வைக்கிறார், பேசிக் கொண்டே மாவு பிசைகிறார், கடைசி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுகிறார். மூன்று குழந்தைகள் உள்ள தாய் எப்படி ஒரு கணம் சும்மா இருக்க முடியும். இலங்கையில் இருந்து அவர் தன் மற்ற இரண்டு குழந்தைகளுடன்  பேசும் காட்சி அருமை. "தாத்தா கிட்ட போன கொடு" அம்மா விட்டு விட்டு போனதால் கோபத்தில் இருக்கும் குழந்தை கேட்கிறது "நீ எனக்கு அம்மாவா, அவருக்கா?" "ரெண்டு பேருக்கும் தாண்டா" என்கிறார் சிமரன். 

கதை, திரைக்கதை மணி ரத்தினம். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார். படத்தில் எந்த ஒரு காட்சியும் சும்மா வருவதில்லை. யதார்த்தத்துக்கு குறைவே இல்லை படத்தில். அகில் என்கிற பெயரில் கடைசி பையனாக வரும் வாண்டு அம்மாவிடம் போய் அக்காவும், அண்ணனும் சண்டை போடுவதை கம்ப்ளைன்ட் பண்ணும் காட்சி சூப்பர். "நான் தான் நடூ...ல" என்று அம்மா அப்பாவின் நடுவில் அமுதா புகும் காட்சி சூப்பர். கல்யாணத்துக்கு முன் சிம்ரன், மாதவன் நடுவில் இருக்கும் காதல் கண்ணாமூச்சியை மணிரத்தினம் வடிவமைத்து இருக்கும் விதம் அருமை. மாதவனின் அக்காவாக வருபவரின் நடிப்பும் அருமை. அதிலும் "லட்டர்! அப்பா!" என்று குழந்தையை தூக்கி கொண்டு அவர் கணவனின் கடிதத்தை எடுத்து செல்லும் காட்சி கண நேர கவிதை . படத்தில் கவர்ந்த காட்சிகள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்றால் படம் முழுவதையும் சொல்ல வேண்டி வரும்.  

Saturday, February 4, 2012

சமீபத்தில் ரசித்த படம் - தாவணி கனவுகள்


ஐந்து தங்கைகள் உள்ள அண்ணன் கதை. பாக்யராஜ் தான் அந்த அண்ணன். துவக்கமே அமர்க்களம். 

அவர் வீட்டுக்கு முன் ஒரு இளைஞர் பட்டாளமே இருக்கும், ஒருவன் சைக்கிளை பழுது பார்த்துக் கொண்டிருப்பான்; அவருடன் ஒருத்தன். இருவர் பாடம் பற்றி சீரியசாக விவாதித்துக் கொண்டு இருப்பார்கள். மோட்டார் சைக்கிளில் இருவர். அனைவர் கவனமும் பாக்யராஜ் வீட்டு மேல். ஒரு மக்கர் போனில் பாக்யராஜ் சொல்வார்:" எங்க வீட்டிலே மானம் மரியாதை தான் மிச்சம் இருக்கு, அத கெடுத்த பாவம் உங்களுக்கு வேண்டாம். இன்னும் போக மாட்டீங்கன்னா உங்களுக்கு எந்த தங்கய பிடிக்குன்னு சொல்லுங்க, அவள உங்களுக்கு கட்டி வைக்கறேன்"  கூட்டம் கலைத்து காணாமல் போகிறது.

திரைக்கதை அமைப்பதில் அவருக்கு நிகர் அவரே.  வேலை கிடைக்காமல் பிளாஸ்டிக் சாமான் கூடை தூக்கித் தலைமேல் வைத்து கூவி விற்கிறார்.எதிரே வேலை இல்லா இளைஞர் போராட்ட ஊர்வலம் கோஷமிட்டுக் கொண்டே வருகிறது.  பாக்யராஜ் கூவி விற்பதும், போராட்ட கோஷமும் கீழ்க் கண்டவாறு சின்க் ஆகின்றன.

"வேலை இல்லா பட்ட தாரிகளுக்கு...." (கூட்டம்)
"பிளாஸ்டிக் சாமானம், பிளாஸ்டிக் சாமானம்"  (இது பாக்யராஜ்)
"படித்த பட்டதாரி வாலிபர்களுக்கு..."
"பிளாஸ்டிக் சாமானம், பிளாஸ்டிக் சாமானம்"

இன்னொரு கட்டம். மிலிட்டரியாக வரும்  சிவாஜி கணேசன் கோவில் பூசாரியிடம் கேட்டகிறார்: "நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் தெரியுமா உனக்கு?" 
"போஸூ  பக்கத்து தெருவில பொட்டிக்கட வச்சுருக்காருங்க. ஆனா, நேதாஜி, சுபாஸூ  இவங்கள நமக்கு பழக்கமில்லீங்க"



கடைசி தங்கையாக வருபவர் நடிப்பு சூப்பர். தன் தங்கைகளை கரையேற்ற வேண்டி வேலை தேடி சென்னை செல்கிறார் அண்ணன் பாக்யராஜ். சம்பாதிக்க பல வழிகளை முயன்று கடைசியில், பாரதி ராஜா கண்ணில் பட்டு ஹீரோ ஆகிறார், பணம் கிடைக்கிறது. அது வரை குடும்பத்துக்கு பாதுகாப்பாகவும் இருந்து மாத செலவுக்கு பணம் கொடுக்கிறார் சிவாஜி. போஸ்ட் மேனாக வருகிறார் பார்த்திபன். பாரதி ராஜா அவராகவே வருகிறார். ராதிகா சென்னையில் சினிமா வாய்ப்பு தேடும் பாக்ய ராஜாவுக்கு உதவுகிறார்.  பணத்தை பெரிதாக நினைக்கும்  வரன்களை ஒதுக்கி  நல்லவர்களான  வாலிபர்களை மனம் முடிக்கிறார்கள் தங்கைகள். இளையராஜாவின் இசை தாலாட்டுகிறது. காமிரா சில இடங்களில் சரியாக இருந்து இருக்கலாம். கல்யாணத்தை வியாபாரமாக்காதீர்கள் என்கிற செய்தியுடன் முடிகிறது படம்.   

Wednesday, January 18, 2012

நண்பன் - திரை விமர்சனம்


ஹிந்தி படமான "3-idiots"-இன் அச்சு மாறாத காப்பி. தமிழுக்காக மாற்றப் பட்ட பாத்திரப் படைப்புகளின் பெயர்கள் மற்றும் பாடல்கள் தவிர்த்து, நுண்ணோக்கி வைத்துப் பார்க்க வேண்டிய சொற்ப இடங்களில் மட்டுமே இயக்குனர் சங்கரின் வித்தியாசங்களைப் பார்க்கலாம். உதாரணத்துக்கு ஒன்று. காதல் வந்தால் என்ன உணர்வு தோன்றும் என்று விஜய் வருணிக்க, ஹீரோயின் இலியானா "இது ஷங்கர் பட கிராபிக்ஸ்ல தான் நடக்கும்" என்று சொல்வார். ஆனால் ஹிந்தி படத்தை விட சிறப்பாக தர முடியாது என்பதால் காட்சி, காமிரா கோணம் எல்லாவற்றையும் அப்படியே தந்திருக்கிறார். (நாம் நினைத்தது போலவே விஜய் டி.வீ நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் இந்தத் தகவலை சொல்லி இருக்கிறார். திரைக்கதையை ஹிந்தி மூலத்தில் இருந்து அப்படியே தரவேண்டும் என்றும் சின்ன நுணுக்கம் கூட மாறி போகக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்ததாக சொல்லுகிறார்.)

கதை தொடங்கும் முன் சில தகவல்கள்: நண்பன், ஹிந்தி "3-idiots"-இன் தழுவல் என்று சொல்லிவிட்டோம். "3-idiots"-இன் கதை எழுதியவர் அபிஜத் ஜோஷி மற்றும் ராஜ்குமார் ஹிரானி.  திரைக்கதை எழுதியவர்கள் அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் விது வினோத் சோப்ரா. இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. இவர்களுக்குத் தான் அத்துனை பாராட்டுகளும், புகழும் போய்ச் சேரும். ஹிந்தி படத்துக்கு மூலம் பிரபல எழுத்தரான சேத்தன் பகத் எழுதிய "Five Point Someone – What not to do at IIT!" என்கிற புத்தகத்தையே சேரும். எண்ணம் மற்றும் பிள்ளையார் சுழி போட்டு மூலக்கதை எழுதிய இவரே எல்லா பாராட்டுக்கும் உரியவர் (அப்பாடா...மறக்காம சொல்லிட்டேன்..!)
  
சங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீக்காந்த், சத்தியராஜ், சத்யன் என்று முக்கிய நடிகர்கள் இதில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இலியானா தான் நாயகி. தவிர வாலி குஷி தந்த S.J. சூர்யா ஒரு சிறு கதாபாத்திரத்தில் வருகிறார். மில்லிமீட்டர் என்கிற பாத்திரத்தில் வருகிற இளைஞர் கவர்கிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். 'என் நண்பன் போல யாரு மச்சி' பாடல் படம் முடிந்து பல மணி நேரம் நம் காதுகளில் ஒலிக்கிறது. 









கதை என்னவோ விஜய், ஜீவா & ஸ்ரிக்காந்தை சுற்றி சுற்றி நகர்ந்தாலும் சத்தியராஜ் & சத்யனின் நடிப்பு பிரமாதம். "வைரஸ்" என்று மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரின்சிபால் விருமாண்டி சந்தனம் என்கிற பாத்திரமாக வழுக்கை தலையும் பெரிய கண்ணாடியுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சத்தியராஜ். உலகமே போட்டி தான், இரண்டாவது இடம் என்பது தோல்வி, முதல் இடம் தான் வெற்றி என்கிற கொள்கை உடையவர் இந்த விருமாண்டி சந்தனம். இவரை இவருடைய கொள்கைகளால் நாம் வெறுக்கும் விதமாக பாத்திரம் சித்தரிக்கப் பட்டாலும் சத்யராஜை நம்மால் வெறுக்க முடியவில்லை, அது சின்ன சறுக்கல் தான். நாசர் இன்னும் பொருத்தமான தேர்வாக இருந்து இருக்குமோ ( எம்டன் மகன் படத்தை பார்க்க) என்று தோன்றுகிறது. சத்யராஜை இரண்டாவது இடத்துக்கு தள்ளி நடிப்பில் முதல் இடத்துக்குத் தாவி இருப்பவர், ஸ்ரீவத்சன் என்கிற பெயரும் "சைலன்சர்"  என்கிற பட்டப் பெயரும் கொண்ட பாத்திரமாக வரும் சத்யன்.  உருப் போட்டு (மக் அடித்து, கடம் அடித்து, மனப் பாடம் செய்து) 'படித்து' மார்க் வாங்கி நல்ல பெயர் வாங்கும்  முதல் பெஞ்ச் மாணவன் பாத்திரம் இவருக்கு. படத்தில் ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கப் பட்டு இருக்கிறது. உதாரணமாக எதற்கெடுத்தாலும் விலை சொல்லும் பாத்திரம் ஒன்று; "Mr. Price Tag" ("விலை ஸ்டிக்கர்" என்று தமிழ்(?) படுத்தி சொல்லலாம்) என்று பெயர் வைத்து இந்த 3 நண்பர்களும் கூப்பிடும் பாத்திரம் ஒன்று நாம் பல சமயங்களில் பார்க்கிற ஒன்று. தனது காலணி மீது சட்னி கொட்டிவிட "என்னோட 300 டாலர் ஷூ மேல சட்னி கொட்டிடீயே" என்று கத்துகிறது. இப்படி சின்ன சின்ன விஷயங்களை ரசிக்கும் விதமாக செய்திருப்பது கதாசிரியரின் திறமை.
வெங்கட்ராம கிருஷ்ணன் (ஸ்ரீக்காந்த்) பிளேனில் உட்கார்ந்து இருக்கிறார், பிளேன் கிளம்பப் போகிறது. அந்த சமயத்தில் அவருக்கு ஒரு போன் வருகிறது. பிளேனை நிறுத்தி இறங்கி தான் நண்பனான சேவற் கொடி செந்தில் (ஜீவா) க்கு போன் அடிக்கிறார். விஷயம் கேட்டு பேன்ட் கூட போடாமல் ஓடி வருகிறார் செந்தில். இவர்களை கூப்பிட்டது ஸ்ரீவத்சன் என்கிற சைலேன்செர். அவரை பார்க்க அவர்கள் காலேஜ் வாட்டர் டாங்குக்கு வர சொல்கிறார், பாரி என்கிற இவர்களது நண்பன் "பஞ்சவன் பாரி வேந்தன்" (விஜய்) அங்கு வருவார் என்று நினைத்து அலறி அடித்து அங்கு செல்கிறார்கள் இவர்கள். அங்கே சைலேன்செர் மட்டும் தான் இருக்கிறான். தான் தற்போதைய வீடு, கார் என்று வசதியாக வாழ்வதை காட்டி தான் 10 வருஷத்துக்கு முன் போட்ட பந்தயத்தில் ஜெயித்து விட்டதாக சொல்கிறார். இவர்கள் அதை பெரிதாக எடுக்கும் நிலையில் இல்லை. பாரி எங்கே என்று கேட்கிறார்கள். பாரி ஊட்டியில் இருப்பதாக சொல்கிறான் சைலேன்செர். அவனுடைய காரில் ஏறி ஊட்டி நோக்கி செல்கிறார்கள். 
பிளாஷ் பேக் தொடங்குகிறது: "IEC" (IIT போல சொல்கிறார்கள்) என்கிற யாருக்கும் கிடைக்காத காலேஜ், முதல் நாள், சீனியர்கள் ராக்கிங் செய்கிறார்கள். பாரியை ஒன்றும் செய்ய முடியவில்லை அவர்களால். ஐந்தாங் கிளாசில் படித்த ஒரு சின்ன விஷயத்தால் சீனியர்களை மடக்கி விடுகிறான் பாரி. அவன் தான் இவர்களுடைய ரூம் மேட். கொஞ்ச நாளில் இவர்கள் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள்.  செந்திலின் அப்பா உடம்பு சரி இல்லாமல் சீரியஸ் ஆக இருக்க பாரி புத்திசாலித் தனத்தால் அவரை காப்பாற்றுகிறான். பாரிக்கும் உலகமே போட்டி மேடையாக நினைக்கும் சந்தானத்துக்கும் அடிக்கடி மோதல் வருகிறது. அவர் நண்பர்களை பிரிக்க எண்ணுகிறார். அதை தாண்டி நட்பு இறுகுகிறது. 
ஊட்டிக்கு கார் செல்கிறது. பாரியின் வீட்டுக்கு போகிறார்கள். ஆனால் பாரி (S.J. சூர்யா) என்று சொல்பவர் வேற ஆள். பாரியின் காலேஜ் போட்டாவில் இவர்கள் இருக்கிறார்கள், இவர்களது நண்பன் பாரிக்கு பதில் இந்த பாரி இருக்கிறார். மிரட்டி கேட்ட பிறகு தெரிகிறது: பாரியாக வந்தது இவரது வீடு வேலைக்காரறது பிள்ளை, அவனை "பப்பு" என்று கூப்பிடுவார்கள். பாரிக்கு பதில் பப்பு படிப்பான் என்றும், அதற்க்கு அப்பறம் இவன் காலேஜ் சம்பந்தப் பட்ட யாரோடும் தொடர்பு வைக்க கூடாது என்றும் கண்டீஷன். பப்பு இப்போது தனுச்கொடியில் இருக்கிறான், ஸ்கூல் வாத்தியாராக. சைலேன்செர் ரொம்ப சிரிக்கிறான். தான் மேல் நிலையில் இருப்பதும், பப்பு வாத்தியாராக போய் விட்டதும் தான் காரணம். பஸப்புகழ் என்கிற சயன்டிஸ்ட் உடன் ஒரு ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் அது முடிந்தால் இவனை கையிலேயே பிடிக்க முடியாது என்றும் சொல்கிறான். பஸப்புகழ் என்கிற அறிஞ்சரை உலகம் வியக்கிறது என்றும் அவரை பார்பதற்காக தான் இந்திய வந்ததாகவும் சொல்கிறான் சைலன்சர். அவனை கட்டி காருக்குள் போட்டு விடுகிறார்கள் நண்பர்கள்.
 கார் தனுஷ்கோடி நோக்கி செல்கிறது. மீண்டும் பிளாஷ் பேக். பாரி இவர்கள் நினைத்ததை அடைய உதவி செய்கிறான். வெங்கட் வன விலங்குகளை படம் பிடிக்கும் போட்டோகிராபராக வர எண்ணுகிறான், அப்பாவிடம் பேச தயக்கம். செந்தில் பயந்து சாகிறான் எதற்கெடுத்தாலும். பாரி இவர்களுடைய இந்த குணங்களை மாறி அவர்கள் நல்ல நிலையை அடைய வைக்கிறான். தான் அறிவாலும் நல்ல எண்ணத்தாலும் சந்தனத்தின் மனதை வெல்லுகிறான். அவர் மகள் ரியா (இலியானா) மேல் இவனுக்கு காதல். மன மேடையில் இருந்து பப்புவுக்காக அவள் வெங்கட் & செந்தில் கூட வருகிறாள் இவனை பார்பதற்காக.

பப்பு அங்கே இருந்தானா, ரியாவை கை பிடித்தானா, சைலன்செரை எப்படி சமாளித்தான் என்பதை வெள்ளித் திரையில் காண்க. 

("இல்லீன்னா கொஞ்ச நாள் கழிச்சி இங்க வா, தல...கிளிமாக்ஸ் வர கதய நா சொல்றேன்" )

ஆனால் ஒரு மிகத் தரமான (ஹிந்தி) படத்தை அப்படியே தமிழ் ரசிகர்களுக்கு சேர்த்ததற்காக இயக்குனருக்கு நமது பிரமு இணையம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது. உங்களது கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

Saturday, January 7, 2012

சமீபத்தில் ரசித்த படம்: சதிலீலாவதி



1990 களில் வந்தாலும் இன்றும் ரசிக்க வைக்கிற படம். ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா பிரதான பாத்திரங்களில் நடித்தாலும் கமலஹாசன், கோவை சரளா படத்தை தூக்கி உக்கார வைக்கிறார்கள். சபாபதி என்கிற காரக்டரில் ஒரு நாய் வேறு.(அதன் அறிமுகக் காட்சியே நம்மை சிரிக்க வைத்து விடுகிறது) 

அருண் என்கிற சபல கேஸ் (ரமேஷ் அரவிந்த்) லீலாவதி (கல்பனா) என்கிற பணக்கார மனைவி. கொஞ்சம் வெடுக் வெடுக் என பேசும் குணம் உள்ள லீலாவதி உண்மையில் ரொம்ப நல்லவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள், அருணுடைய அப்பாவும் இவர்களுடனே இருக்கிறார். அருனுக்கோ ரொம்ப மாடர்ன் பெண்ணான, பணத்தை ரொம்ப விரும்புகிற பிரியா (ஹீரா) என்ற பெண்ணிடம் பழக்கம் கிடைகிறது. அருண் ஏற்கனவே திருமணம் முடித்தவர் என்பது தெரியாமல் காதலிக்க ஆரம்பிக்கிறார். பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பது நினைவுக்கு வருகிறது (?!) இந்த ஜோடி பெங்களுரு செல்கிறார்கள். போகும் போதே  தற்செயலாக அருண் தன்னுடைய பால்ய நண்பன் சக்திவேல் கவுண்டரை (கமல்) பார்கிறார். 

"அருணு..." என்று கமல் கூப்பிடும் போதே தெரிந்து விடுகிறது, கமல் களை கட்டுவார் என்று. ரமேஷ் அரவிந்த் விஷயம் அவர் மனைவிக்கு தெரிந்து அவர் சண்டை போட்டு வீட்டை விட்டு இவரை அனுப்பி விட அந்த ஜோடிக்கு வசதியாக போய் விடுகிறது. அவர்கள் செட்டில் ஆகி விடுகிறார்கள். கோபப் பட்டு லீலாவதி, சதி லீலாவதியாக மாறி பல வேலைகள் செய்கிறார். கமல் இதற்க்கெல்லாம் உதவி செய்ய ரமேஷ் அரவிந்த் அவர் மனைவியிடம் சேர்கிறார், ஹீரா அவருடைய முன்னாள் காதலருடன் சேர்கிறார். எல்லாம் சுபமாக முடிகிறது.

பாலு மகேந்திரா இயக்கம். பல இடங்களில் செவ்வாய் கிழமை டி.வி நாடகம் போல காட்சி அமைப்புகளும், செட் அமைப்பும் இருக்கிறது. 

படத்துக்கு உயிர் கொடுக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது கிரேசி மோகனுடைய வசனம். சும்மா பின்னிருக்கார்... 

"குலைக்கிற நாய் எங்கயாவது கடிக்குமா மாமி ?"
"அது உனக்கும் எனக்கும் தெரியறது. அதுக்கு தெரியுமோ ?"

"மூக்கு போடி போட்டா நோய் வரும்னு சொல்றாங்க, அதை விட்டுடுங்களேன்"
"இப்ப உள்ள பொடிக்கு தும்மலே வர மாட்டேன்கறது"

பக்கத்துக்கு  வீடு மாமி லீலாவதியின் மாமனார் குறித்து சொல்லும் வசனம்: "அது பெரிய சபாபதி, இது குறைக்கிறது; அது பேசறது"
படம் முழுக்க சொல்லிட்டே போகலாம். எல்லா நடிகர்களும் பாத்திரம் அறிந்து நன்கு நடித்து இருக்கிறார்கள். கமல் பற்றி சொல்லவே வேண்டாம். கோயம்புத்தூர் பாஷையை அவ்வளவு அழகாக பேசி இருக்கிறார். கூடவே கோவை சரளா வேறு:
"அதான் தொடைல தட்டி தட்டி பாடுவாங்கல்லோ...அதே மாறி பாடுங்கோ"
"மாமா, ஏன் பாட்ட நிறுத்திப் போட்டீங்கோ...உங்க சங்கீதத்தில தொபுக்கடீர்னு குதிச்சு நீச்சலடிக்கலாமுன்னு வந்த என்ன ஏமாத்தி போடாதீங்கோ மாமா.."
எல்லா பாலு மகேந்திரா கதாநாயகிகள் போல, ஹீரா அழாகாக இருக்கிறார். 
படத்தில் கதாபாத்திரங்கள் அழகாக படைக்கப் பட்டு இருக்கின்றன, அந்த நுணுக்கங்கள் பாலு மகேந்திராவின் திறமை என்று சொல்லலாம்.

இது பழைய தத்துவம்: "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள், தோல்விக்கு பின்னால் இருவர் இருக்கிறார்கள்"

Monday, December 26, 2011

சமீபத்தில் பார்த்த சைனீஸ் படம் - இப்மேன் (ஆங்கில சப் டைட்டிலுடன் பார்த்தது)


இந்த இப்மேன் தான் புரூஸ் லீ-க்கு குங்-பூ சொல்லிக் கொடுத்த குரு. அவரோட வாழ்க்கைக் கதை தான் இந்தப் படம்.




இப் மேன் கிராமத்தில பெரிய குங்பூ மாஸ்டர், பெரிய பணக்காரன். அந்த கிராமத்த ஜப்பான் ராணுவம் புடிசுக்குது 2-ம் உலக போர் சமயம். இப்மேன் வீட்ட எடுத்துக்கறாங்க. வீடில்லாத பணம் இல்லாம இவர் குடும்பம்  கஷ்டப் படுது.  ஜப்பான் ராணுவ அதிகாரி கராத்தே பிரியர்.  சண்டை தெரிஞ்சவங்க கூட அவர் சண்டை நிகழ்சிகள் நடத்தறார் - சைனா காரங்க ஜெயிச்சா அவங்களுக்கு அரிசி (சாப்பாட்டுக்கு) கொடுக்கறாங்க. அதுக்காக நிறைய பேரு வர்றாங்க.  இப் மேன் கரி அள்ளிப் போடற வேலை செஞ்சு அரை வயறு சாப்பட்டாலும் சண்டைக்கு போக மறுக்கறாரு. 
அவரோட சொந்தக் காரப் பையன் அந்த சண்டைல இறந்திடறான். அது தெரியாம அவன தேடி அங்கப் போறாரு, சண்டை போடற சூழ்நிலை வருது. அவங்க ஆச்சர்யப் பட மாதிரி சண்டை போட்டு அவங்கள ஜெயிக்கராறு. ஜப்பான் காரங்களுக்கு இது பிடிக்கல. இவர அடக்கரதுக்காக சில பெரிய தப்புகள் செய்திடறாங்க ராணுவ அதிகாரிக்கு அடுத்த இடத்தில இருக்கறவர். 
இப் மேன் ஜப்பான் அதிகாரிக்கு ஒரு சேலஞ் வைக்கறாரு: ரெண்டு பெரும் நேருக்கு நேர் மோதனும்னு. ஜப்பான் அதிகாரி நல்லவர் தான் அவர் ஒதுக்கறார்.  இரண்டாம் நிலை அதிகாரி இப் மேன மிரட்டறார். சண்டை நடக்குது, இப் மேன் ராணுவ அதிகாரிய அடிச்சு போட்டிடறார். அது பிடிக்காம இரண்டாம் நிலை அதிகாரி இப் மேன துப்பாக்கியால சுட்டிடறார். குண்டு அடி பட்ட இப் மேன் தப்பிச்சு ஹான்க் காங் போய்டறார். படம் முடியுது.
படத்தில வசனங்கள் எல்லாம் சைனீஸ் மொழியில இருக்கு..எதுவும் புரியல. சப்-டைட்டில் பாத்து புரிஞ்சுக்க வேண்டியது இருக்கு. 


சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படம் - மெமண்டோ (Memento)


கஜினி படத்துக்கு ஐடியா இந்த படத்தில இருந்து தான் சுட்டாங்க. நம்ம கதாநாயகனுக்கு  15 நிமிஷம் மட்டும் தான் நியாபகம் இருக்கும். உடம்பு முழுக்க பச்சை குத்தி இருக்கான், அவனுக்கு மறக்க கூடாத விஷயங்கள. பாக்கற எல்லாரையும் போட்டோ எடுத்து வச்சுக்ரான். போட்டோ பின்னால சில குறிப்புகள் எழுதியும் வச்சி இருக்கான், நினைவு படுத்திகரதுக்காக.
படமும்  15 நிமிஷம் கொண்ட பகுதிகளா நகருது. கதைய வித்தியாசமா சொல்றாங்க. கடைசி நடக்கறது தான் முதல்ல வருது (அதாவது கிளைமாக்ஸ் முதல்ல). அதுக்கு முன்னாடி நடந்தது அப்பறம் வருது. இப்படி சொல்லலாம்: கிளைமாக்ஸ்-ல வில்லன் சாகறான். அப்பறம் வர்ற காட்சியில அவன் ஹீரோ கிட்ட வாக்குவாதம் செய்யறான். அப்பறம் வர்ற காட்சியில அவன் ஹீரோவ பாக்கறான் - இப்படி. நேரடியா காட்றதா இருந்தா முதல்ல ஹீரோ வில்லன் பாத்துக்குவாங்க, அப்பறமா பேசுவாங்க அப்பறம் வில்லன் அடி வாங்குவான். எப்படித் தான் இப்படியெல்லாம் (ரூம் போட்டு ?!) யோசிக்கறாங்களோ ஹாலிவூட்லே !

கதைல இன்னொரு பகுதி கருப்பு வெள்ளை காட்சிகளா வருது. இந்த கருப்பு வெள்ளை பகுதியில கதாநாயகன் யார் கிட்டயோ போன்லே பேசறான். தன் வாழ்கையில அவனுக்கு நியாபகம் இருக்கற நிகழ்ச்சி பத்தி பேசறான். பின்னோக்கி போற காட்சிகளும் முன்னோக்கி போற கருப்பு  வெள்ளை காட்சிகளும் கடைசியிலே சந்திக்குது, படமும் முடியுது. டைரக்டர் எப்படியம் நம்மள ரெண்டு வாட்டி பாக்க வச்சிடுவார், அப்பத்தான் புரியும் நமக்கு.

முன்னோக்கி பின்னோக்கி அப்படீன்னு சொல்லாம கதைய சாதாரணமா சொல்றேன் இங்கே. ஹீரோ கிட்ட ஒரு போலீஸ் காரன் போன்லே பேசறான். ஹீரோ அவன் வாழ்க்கையிலே நடந்த ஒரு நிகழ்ச்சிய சொல்லறான். ஹீரோ அப்ப கார் இன்சூரன்ஸ் கம்பனிலே வேல பாக்கறான். ஒரு கார் ஆக்சீடன்ட்ல ஒருத்தனுக்கு நியாபகம் மறதி வந்திடுச்சி (15 நிமிஷத்துக்கு அப்பறம் எல்லாமே மறந்திரும்), இத சரி பண்றதுக்கு மருந்து செலவ இன்சூரன்ஸ் கம்பெனி எதுக்கலாமா வேண்டாமா-ன்னு முடிவு பண்றதுக்கு நம்ம ஹீரோவ அனுப்புது. அவனும் பாத்திட்டு உடலுக்கு கோளாறுன்னா கம்பனி ஏத்துக்கும் இவருக்கு மனசு கோளாறு அதனால செலவ எதுக்க முடியாதுன்னு சொல்லிடறான். செலவுகள் பொறுக்க முடியாமலும் இவனுடைய மறதி பிரச்னை தாங்க முடியாம அவ தற்கொலை செஞ்சுக்கரா.

அந்த போலீஸ் காரன் ஹீரோவ நேரடிய வந்து பாக்கறான். ஹீரோ அவன் மனைவிய கொலை செஞ்ச ஒருத்தன தேடிட்டு இருக்கான், அவன் பேரு ஜான் அப்படீங்கறது மட்டும் தான் ஹீரோக்கு தெரியும், மற்றபடி எதுவும் தெரியாது. போலீஸ் காரன் வந்து ஜான் யாருங்கரதையும், அவன் இருக்கற இடத்தயும் கண்டு பிடிசுட்டதாவும் சொல்லறான். சொல்லீட்டு ஹீரோவ அனுப்பி வைக்கறான். அங்க போனா ஜான் இவன தெரிஞ்ச மாதிரி பேசறான். ஹீரோவுக்கு ஆத்திரம் வருது, அவன அடிச்சி சாகடிக்கறான். அடிக்கும் போது அந்த ஜான் தன் காரையும், அதில இருக்கற பணத்தையும் எடுத்துக்க சொல்லிட்டு அவன விட்டுற சொல்லறான். இவனோட கோட் சூட் எல்லாம் ஹீரோ எட்துகிட்டு அவன நல்லா அடிச்சிடறான்.  அடி நல்லா பட்டு அவன் சாகர அளவுக்கு போயிடறான். சாகும்போது ஹீரோ போலீஸ் காரன்கிட்ட சொன்ன கதைல வர்ற ஆளு பேர முனங்கறான். இறந்தவனோட டிரெஸ்ஸ போட்டுக்கறான். அவன் கார எடுத்துக்கறான். நம்ம ஹீரோ-க்கு சந்தேகம் வருது, அந்த கதைய நல்லா பழகுரவங்களுக்கு மட்டும் தான் சொல்வான் ஹீரோ. அப்படீன்னா இவன் ஜான் இல்ல.

இந்த சமயத்திலே போலீஸ் வர்றான், அவன் மேல ஹீரோக்கு ரொம்ப சந்தேகம் வருது. அவன் சொல்லற பொய்கள நம்பக் கூடாதுன்னு அவன் போட்டோ பின்னால எழுதி வைக்கறான். அவனோட கார் பிளேட் நம்பரையும் எழுதி வைக்கறான்.  ஒரு பச்சை குத்தற இடத்துக்குப் பொய் அந்த நம்பெர பச்சயா குத்திக்கறான். இவன் போட்டிருக்கற கோட் பாக்கட்லே  ஒரு அட்ரசும், நம்பரும்  இருக்கு. அங்க போறான், ஒரு லேடியா மீட் பண்றான். காரையும் கோட்டையும் பாத்து அவளுக்கு சந்தேகம் வருது, அவ இறந்து போன ஆளோட கேர்ள்-பிரன்ட். அவ திறமையா ஒரு விஷயத்த கண்டு பிடிசிக்கறா.  இவன யாரோ பயன் படுத்திருக்காங்க. அவ இவன் எழுதி வச்சு இருக்கற நம்பர் ப்ளேட் வச்சு அந்த போலீஸ் காரன் போட்டோ பேரு கண்டு பிடிச்சு கொடுக்கறா. அதிலே அவன் பேரு ஜான் அப்படீன்னு வருது. அவன கூட்டிட்டு போறதுக்கு ஒரு இடத்தையும் சொல்லறா. அந்த இடம் அவளோட பாய்-பிரான்ட் இறந்த இடம்.

நம்ம ஹீரோ இந்த போலீஸ் காரன அந்த இடத்துக்கு கூட்டிட்டுப் போய் சாகடிக்கறான்.  அதோட கதை முடியுது.  படம் எப்படி தொடங்குதுன்னா போலீஸ் காரன் சாகரதில தொடங்குது. ஹீரோ போன்-லே பேசறான். இறந்து போன போலீஸ் காரன் ஹீரோவ தேடி வர்றான்.  ஒரு பொண்ணு இவன் கிட்ட போட்டோ பேரு எழுதின பேப்பர கொடுக்கறா, அதுலே போலீஸ் காரன் போட்டோ இருக்கு அவன் பேரு ஜான் அப்படீன்னு இருக்கு. அவ யாருங்கறது ஹீரோக்கு தெரியல. அதே பொண்ணு கிட்ட ஹீரோ பேசிட்டு இருக்கான், அவன் மனைவிய பத்தி சொல்லிட்டு இருக்கான். அவல கொன்னவன் பேரு ஜான் அப்படீன்னு சொல்லறான். கோட் பாக்கட்ல இருந்து ஒரு பொண்ணு பேரு, அட்ரஸ் எடுக்கறான். அந்த பொண்ண போய் பாக்கறான் (இவன் மனைவி பத்தி சொல்லிட்டு இருந்த அதே பொண்ணு). ஹீரோ ஒரு  பாழடஞ்ச கட்டடத்தில இருந்து வெளிய வர்றான், போலீஸ் காரன் அங்க வர்றான், அவன் மேல சந்தேக பட்டு அவன் கார் நம்பர் ப்ளேட் நம்பர எழுதிக்கறான். பச்சை குத்தற இடத்துக்கு போறான். பாழடஞ்ச இடத்தில ஒருத்தன அடிச்சு போடறான்.

Sunday, December 25, 2011

சமீபத்தில் பார்த்த ஹாலிவூட் படம் - டின்டின்



டின்டின் ஒரு பதினாலு பதினைந்து வயது சிறுவன், வீர சாகசங்களின் மேல் தீராத ஆர்வம் உடையவன்.  ஜுராசிக் பார்க் படம் டைரக்ட் பண்ணின ஸ்டீபேன் ஸ்பீல்பர்க் எடுத்து இருக்கார். உலகம் முழுக்க முன்னாடியே ரிலீஸ் ஆய்ட்டாலும், அமெரிக்கால இப்ப தான் ரிலீஸ் ஆகுது. IMAX தியேட்டர்ல 3D ல பாக்கும் போது ரொம்ப நல்லாவே இருக்கு. 



Friday, September 30, 2011

சமீபத்தில் ரசித்த படம் - உள்ளத்தை அள்ளித்தா



சுமார் 14 வருடங்களுக்கு முன் வந்த படம், இப்போது பார்த்தாலும் சிரிக்க வைக்கிறது. 

காமெடிக்கு கார்த்திக், கௌண்டமணி ஜோடி பத்தாது என்றால், மணிவண்ணன், ஜெய்கணேஷ், செந்தில், பாண்டு என்று நகைச்சுவை கதாபாத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு கட்டத்தில் எல்லா கதாபாத்திரங்களும் ஒரே வீட்டுக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது இப்பவும் வாய் விட்டு சிரிக்க வைகிறது. "சுட்ட்ட்டு புடுவேன்" என்று விறைப்பாக வரும் ஜெய்கணேஷ் கடைசியில் "ரொட்டி சுடுவேன்" என்று அந்தர் பல்டி அடிப்பது நாம் முதலில் இருந்தே எதிர்பார்த்தது.

கார்த்திக் (ராஜா) மிகவும் கண்டிப்பான அப்பா ஜெய்கணேஷின் பிள்ளை. காலையில் எழுந்திருப்பதில் இருந்து பாத்ரூம், சாப்பாடு, என்ன உடுத்துவது என்று சகலமும் அப்பாவின் இஷ்டப்படி தான். ஜெய்கணேஷ் ரம்பாவை கார்த்திக்குத் தேர்வு செய்கிறார். ஆனால் போட்டோ மாறிப் போக ஏதோ ஒரு போட்டோ கார்த்திக்குக் கிடைக்கிறது. அதனால் வீட்டை விட்டு ஓடிப் போகிறார் ஊட்டிக்கு. அங்கு கௌண்டமணி (வாசு - கார்த்திக் ஆங்காங்கு செல்லமாக "வாச்சு" என்று கூப்பிடுகிறார்)  சிநேகிதம் கிடைக்கிறது. அங்கு ஊட்டியில் ரம்பாவும் இருக்கிறார். அவர் தான்  தனக்குப் பார்க்கப் பட்ட பெண் என்று தெரியாமல் ஜொள்ளாக விட்டுத் தள்ளி பார்க்கும் வேலை எல்லாம் இழக்கிறார். அதற்க்கு ஈடாக ரம்பாவைக் கடத்தி அவர் அப்பாவிடமிருந்து பணம் பறிக்க எண்ணுகிறது கார்த்திக், கௌண்டமணி கோஷ்டி.       

இவர்கள் கடத்தும் முன் வேறொரு கும்பல் கடத்துகிறது ரம்பாவை. "நாங்க செய்யனுண்டா அது" என்று சொல்லித் துரத்தி ரம்பாவை மீட்கிறார்.  ரம்பாவின் அப்பா மணிவண்ணன் கார்த்திக்கை டிரைவராக மற்றும் பாடிகார்டாக வேலைக்கு சேர்க்கிறார்.  இந்த சமயத்தில் கௌண்டமணி காணமல் போன ராஜா (கார்த்திக்) வாக மணிவண்ணன் வீட்டுக்கு வருகிறார். 

ஜெய்கனேஷும் மணிவண்ணனும் நண்பர்கள். இதே வீட்டுக்கு ஜெய்கனேஷும் வர, கார்த்திக்கும் கௌண்டமணியும் சமாளிக்கிறார்கள் - ராஜா & டிரைவர்-ஆக. மணிவன்னனுக்குத் தம்பியாக இன்னொரு மணிவண்ணன் வேறு வருகிறார். 

தன்னிடம் கார் டிரைவராக இருக்கும் கார்த்திக் தன் மகள் ரம்பாவை காதலிப்பது தெரிந்ததும் மணிவண்ணன் கார்த்திக்கை கூப்பிட்டு பேசுகிறார். இது வாக்குவாதமாக மாறி  கார்த்திக் 5 லட்சம் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதாக சவால் விடுகிறார். கார்த்திக்கும் கௌண்டமணியும் இந்த முறை(!?) மணிவண்ணனை கடத்தி அவர் மகள் ரம்பாவிடம் ஐந்து லட்சம் வாங்க நினைகிறார்கள். தம்பி மணிவண்ணன் அண்ணன் மணிவண்ணனைக்  கடத்தி  அண்ணன் சொத்துக்களைத் தனதாக்க எண்ணுகிறார்.  எல்லாரும் மணிவண்ணனைக் கடத்த ஒரே வீட்டுக்குள் முயற்சிக்கிறார்கள். இந்த இடம் தான் என்னை இப்போது பார்க்கும் போதும் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.  ஒரு வழியாக அண்ணன் மணிவண்ணன் கடத்தப்பட்டு தம்பி அந்த இடத்துக்கு வருகிறார். அவர் மீது சந்தேகம் வருகிறது கார்த்திக், ரம்பா, கௌண்டமணி எல்லாருக்கும். 

பின்னர் என்ன ? டிஷ்யூம் டிஷ்யூம் தான். போலீஸ் வந்து கரெக்டா கெட்டவர்களைக் கைது செய்து எல்லாம் சுபம்.

சிற்பி இசை அமைத்திருக்கிறார். எல்லா பாடல்களையும் அராபிய நாட்டு பாடல்கள், பாகிஸ்தான் நாட்டு பாடல்களிலிருந்து சுட்டிருக்கிறார்.  

டைரக்ஷன் சுந்தர்.c எல்லா காட்சிகளிலும் நகைச்சுவை விருந்து படைக்கிறார். படம் கடைசி வரை விறு விருப்பாகவும் நல்ல பொழுது போக்கும் வகையிலும் கொடுத்திருப்பது சிறப்பு. சின்ன பட்ஜெட் சிறந்த படம் கொடுத்த இவருக்குப் பாராட்டுக்கள். 

நீங்கள் ரசித்த நினைவில் இன்னும் இருக்கிற காட்சிகளையும், உங்கள் கருத்துக்களையும் எழுதவும்.