Memories

Sunday, January 13, 2013

சமீபத்தில் ரசித்த படம் - கும்கி




வழக்கமான காதல் கதை போல இல்லாமல், வித்தியாசமான காதலையும் ஒரு யானை பாகனுக்கும் அவனுடைய யானைக்கும் உள்ள பாசப் பிணைப்பையும் காட்டில் வாழ்ந்தாலும் கட்டுப் பாடாக வாழ்கிற மனிதர்களுடைய உணர்வுகளை அற்புதமாக சொன்ன இயக்குனர் பிரபு சாலமன் நம் மனத்தில் உயர்ந்து நிற்கிறார்.

பொம்மனாக விக்ரம் பிரபு, நடிகர் பிரபுவின் மகன். அங்கங்கே பிரபுவின் முகச்சாயல் தெரிந்தாலும் நெடு நெடுவென ஒல்லியாக வருவதாலோ என்னவோ பிரபுவை நியாபகப் படுத்தவே இல்லை. அல்லியாக வருபவர் லட்சுமி மேனன் - இந்த வருடத்தின் கவனிக்கத் தக்க புது முகம். சிலருக்கு இவர் இப்பவே கனவு கன்னியாக ஆகிவிட்டார். தம்பி ராமையா நடிக்கிற கொத்தல்லி என்கிற கதா பாத்திரம், படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதோடு, படத்தின் பிற்பாதியில் சிறந்த குண சித்திர நடிப்பைத் தந்து நெஞ்சில் நிறைகிறது. நகைசுவையில் அங்கங்கே வடிவேலுவின் பாதிப்பு நன்கு தெரிகிறது என்றாலும் குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தும் இடங்களில் தம்பி ராமையா தனித்து தெரிகிறார். உண்டியல் என்கிற பாத்திரத்தில் வருகிற நடிகர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பத்தாம் வகுப்பு டுடோரியல் காலேஜில் படிக்கிற பையனாக வருபவர் ("'சிங்கக்குட்டி' அழக்  கூடாதப்பா")...நியாபகம் வந்து விட்டதா? எல்லாரையும் பின் தள்ளி மனதில் நிறைகிறது மாணிக்கம் என்கிற பெயரில் வரும் யானை. வனத்துறை அதிகாரிகளாக வரும் இருவரும், அல்லியின் தந்தை மற்றும் சித்தப்பாவாக (ஜூனியர் பாலையா) வரும் இருவரும் காட்டுவாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

திரை கதையில் மிஞ்சி விட்டார் பிரபு சாலமன். கொம்பன் என்கிற யானையை கதைக்குள் கொண்டு வரும் விதம், அதை நினைவுக்கு கொண்டு வரும் வகையிலும், திகில் தரும் விதத்தில் அமைத்திருக்கும் பல காட்சிகள் சூப்பர். ஆதி காட்டை திரையில் காட்டும் பல காட்சிகள் கிராபிக்ஸ் என்றாலும் அருமையாக தந்திருக்கிறார் பிரபு சாலமன்.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை இன்னும் சிறப்பாக தந்திருக்கலாம், சில காட்சிகளை திரும்ப திரும்ப வருவது போல காட்டுவதற்கு பதில் வேறு கோணங்களில் தந்திருக்கலாம். படத்தில் கிளைமாக்ஸ்கு முன் வரும் பாடல் மற்றும் சாதாரண மற்ற படங்களை நினைவு படுத்துகிறது. மற்ற எல்லா காட்சிகளும் ரொம்பவும் வித்தியாசமானவை.

பலவித கதாபாத்திரங்கள் [மனிதர்கள் மற்றும் மிருகங்கள் ] மற்றும் அவர்களுடைய உணர்வுகள் படத்தின் கதைக்களத்தில் இயல்பாக கலக்கும்போது உருவாகும் கூட்டாஜ்சோரை விருந்தாகப் படைத்திருக்கிறார் இயக்குனர். தன்  சினிமாத் தனத்தில் இருந்து மாறி நல்ல படைப்புக்களை உருவாக்கும் தமிழ் சினிமாவின் இந்த மாற்றம் ரொம்பவும் நல்லது, இது தொடர வாழ்த்துகிறோம்.

இசை இம்மான். பின்னணி இசையில் பல இடங்களில் மிரட்டுகிறார். காதல் சொல்லுகிற இடங்களில் மயக்குகிறது பின்னணி இசை. 'சொல்லிட்டாளே  அவ காதல", "அயய்யோ ஆனந்தமே" பாடல்கள் தாலாட்டுகின்றன.


No comments:

Post a Comment