எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது; ஆனாலும் இன்னும் ஒரு முறை கூட பார்க்கலாம் என்று தோன்றுகின்ற படம்.
சுரேஷ் கிருஷ்ணாவின் திரைக்கதை இயக்கத்தில் வேறு எந்த படம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு படம் மட்டும் அவ்வளவு அட்டகாசம். வசனங்கள் எழுதியது பாலகுமாரன்; "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி " இவரா எழுதினார்? தெரியவில்லை.
துவக்கம் சாதாரணம் தான்; கொஞ்சம் பில்ட்-அப் சீன்கள் ரஜினிக்காக. பின் ஒரு பாடலுடன் வருகிறார் ரஜினி. பேப்பர் தூவ நிறைய வாய்ப்புகள் தரப்படுகின்றன. அப்பா இல்லாத ஒரு தம்பி, இரண்டு தங்கைகள் மற்றும் அம்மாவை பார்த்துக் கொள்ளும் அண்ணன் ரஜினி. ஆட்டோ ஓட்டுகிறார். அடிதடி என்றால் அவ்வளவு பயம் அவருக்கு. நக்மாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஹீரோயின் வேண்டுமே... நக்மா கவர்ச்சி ஹீரோயின் பாத்திரத்துக்கு மிகவும் பொருந்துகிறார்.
மூத்த தங்கைக்கு அவர் விரும்பிய வரனை கலியாணம் செய்து வைக்கிறார். ஆட்டோ காரன் தங்கைக்கு தன மகனை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லும் பணக்காரனுக்கு பணம் முக்கியம் இல்லை என்பதை உணர்த்தி நல்ல படியாக திருமணம் செய்கிறார்.
தன் தம்பி இன்ஸ்பெக்டர் வேலைக்காக இன்டர்வியு போக போலிஸ் உயர் அதிகாரி மாணிக்கம் என்கிற ஆட்டோ டிரைவர் ரஜினியை பார்க்க வேண்டும் என்கிறார். ரஜினி பார்க்க செல்ல இவரை பார்த்ததும் போலிஸ் அதிகாரி எழுந்து நின்று மரியாதை செய்கிறார். அதற்க்கு முன் நெகடிவாக சில பழைய காட்சிகள் ஓடுகின்றன.
அவருடைய தங்கைக்கு மெடிக்கல் காலேஜ் சீட் கிடைக்காமல் போக ரஜினி அங்கு சென்று அந்த காலேஜ் அதிபருடன் பேசுகிறார். பேசி முடித்தவுடன் தங்கைக்கு சீட் கிடைக்க தங்கையின் கேள்விக்கு ரஜினியின் பதில்: "உண்மையை சொன்னேன்". கல்லூரி அதிபர் தன அடியாட்களுக்கு சொல்லும் பதில்: " தங்கச்சிக்கு அண்ணன்னா நமக்கெல்லாம் அண்ணன்...ஊருக்கே அண்ணன்டா...அன்ன்ன்னன் டா'
இந்திரன் என்கிற ரவுடி தன் தம்பியை அடிக்காமல் தடுக்க இவர் கம்பத்தில் கட்டப்பட்டு அடிக்கப் படுகிறார். ரத்தம் சிந்த சிந்த அவன் ரஜினியை அடித்து துவைக்க ஒரு எதிர்ப்பு காட்டாமல் வாங்கி கொள்கிறார். ஆனால் தன தங்கை அந்த ரவுடியால் ஒரு துளி ரத்தம் சிந்தும் போது அந்த ரவுடியையும் அவன் கும்பலையும் த்வம்சம் செய்கிறார் தனி ஆளாய். பின் இந்திரனை கம்பத்தில் வைத்து கிழித்து எடுக்கிறார்.
அவர் மும்பையில் மாணிக் பாட்சா-வாக மார்க் அன்டனி என்கிற ரகுவரனுடன் மோதிக் கொண்டு இருந்ததும், மார்க் அன்டணியை ஜெயிலில் அடைத்து விட்டு இறந்து விட்டதாக உலகத்தை நம்ப வைத்து விட்டு சென்னை வந்திருப்பதும் தெரிகிறது.
நக்மாவின் கல்யாண தினத்தில் தன் பட்டாளத்துடன் போய் அவரை கூட்டி வர விஷயம் தெரிந்து தப்பித்து வருகிறான் மார்க் அன்டனி. மீண்டும் சண்டை..
போலிஸ் ரகுவரனை கொன்று எல்லாம் சுபம். பல காட்சிகள் சூப்பர் என்று சொல்ல வைக்கும். நக்மாவின் அப்பா கேசவன் என்கிற காரக்டர் 'மார்க் அன்டனி தப்பித்தான்' என்று செய்தி வாசித்து பாப்பரை மடக்கும் போது மார்க் அன்டனி எதிரே இருக்கும் காட்சி. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா' என்று தான் ஏற்பாடு செய்த ஆட்கள் துப்பாக்கி சகிதம் மார்க் அன்டணியை குறி வைத்திருப்பதை ரஜினி காட்டும் காட்சி. "உள்ளே போ" காட்சி போன்ற மேலே விவரித்த காட்சிகள் அருமையிலும் அருமை. எட்டு எட்டா பாடல் தத்துவம். நீ நடந்தால் பாடல் இனிமை. எங்கிருந்து உருவாக்கினாரோ தேவா பாடல்கள் எல்லாம் சிறப்பு. இஸ்டையில் பாட்டு உற்சாகம்.
மொத்தத்தில் இன்னும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.