மணிரத்னம், A. R. ரகுமான், மாதவன், நந்திதா தாஸ், சிம்ரன், பிரகாஷ் ராஜ், பசுபதி என்று ஒரு சிறந்த அணியின் படைப்பு சிறப்பாகத் தான் இருக்க முடியும். ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ரொம்பவும் வித்தியாசமான கதை. பிரச்னை தான் கதையின் களம், ஆனால் அதை தொட்டுக் கொள்ளாமல் ஊடே பயணிக்கிறது; அமுதா என்கிற குழந்தை அவளுடைய உண்மைத் தாயான ஷ்யாமா என்கிற இலங்கையின் மாங்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்ணைத் தேடும் பிரச்சனையை சொல்லுகிறது. படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்கு யாழ்ப்பாணத் தமிழ் மணக்கிறது.
டாக்டர் ஹெரால்ட் விக்கிரமசிங்கே என்ற சிங்களவராக ஆக வரும் பிரகாஷ்ராஜ் அருமை, அமுதாவுக்கும் அவருக்கும் வரும் உரையாடல்கள் மிகவும் அருமை. கடைசி காட்சியில் காமிரா எல்லாருடைய முகத்துக்கும் மாறி மாறி செல்லும் போது எல்லாருடைய நடிப்பும் தெரியும், அருமையாக செய்திருக்கிறார்கள். அமுதாவாக வரும் கீர்த்தனா கலக்கி (அதாவது நன்றாக செய்து) இருக்கிறார். நந்திதா தாஸ் பற்றி சொல்லவே வேண்டாம். A. R. ரகுமான் என்று சொல்லி விட்டோம், அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.
சின்ன சின்ன காட்சிகள் கூட தத்ரூபமாக வருகிறது. சிமரன் மூன்று குழந்தைகளுக்கு தாயாக வருகிறார். குழந்தைகளை பார்க்கும் தாயை தத்ரூபமாக பிரதிபலிக்கிறார். துணிகளை எடுத்து வைக்கிறார், பேசிக் கொண்டே மாவு பிசைகிறார், கடைசி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுகிறார். மூன்று குழந்தைகள் உள்ள தாய் எப்படி ஒரு கணம் சும்மா இருக்க முடியும். இலங்கையில் இருந்து அவர் தன் மற்ற இரண்டு குழந்தைகளுடன் பேசும் காட்சி அருமை. "தாத்தா கிட்ட போன கொடு" அம்மா விட்டு விட்டு போனதால் கோபத்தில் இருக்கும் குழந்தை கேட்கிறது "நீ எனக்கு அம்மாவா, அவருக்கா?" "ரெண்டு பேருக்கும் தாண்டா" என்கிறார் சிமரன்.
கதை, திரைக்கதை மணி ரத்தினம். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார். படத்தில் எந்த ஒரு காட்சியும் சும்மா வருவதில்லை. யதார்த்தத்துக்கு குறைவே இல்லை படத்தில். அகில் என்கிற பெயரில் கடைசி பையனாக வரும் வாண்டு அம்மாவிடம் போய் அக்காவும், அண்ணனும் சண்டை போடுவதை கம்ப்ளைன்ட் பண்ணும் காட்சி சூப்பர். "நான் தான் நடூ...ல" என்று அம்மா அப்பாவின் நடுவில் அமுதா புகும் காட்சி சூப்பர். கல்யாணத்துக்கு முன் சிம்ரன், மாதவன் நடுவில் இருக்கும் காதல் கண்ணாமூச்சியை மணிரத்தினம் வடிவமைத்து இருக்கும் விதம் அருமை. மாதவனின் அக்காவாக வருபவரின் நடிப்பும் அருமை. அதிலும் "லட்டர்! அப்பா!" என்று குழந்தையை தூக்கி கொண்டு அவர் கணவனின் கடிதத்தை எடுத்து செல்லும் காட்சி கண நேர கவிதை . படத்தில் கவர்ந்த காட்சிகள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்றால் படம் முழுவதையும் சொல்ல வேண்டி வரும்.
மணிரத்னம் அவர்கள் எடுத்த படங்களில் என்னை வெகுவாக கவர்ந்த படமாக இதனை சொல்லலாம்..அவ்வளவு இயல்பாக ஒவ்வொரு காட்சியையும் நகர்த்தி சென்றிருப்பார்..பக்கத்து நாட்டு போரில் நமது இனம் அழிவதை பார்த்து கண்டும் காணாமல் இருக்கும் தமிழ் சினிமா துறையில், இந்த படத்திலாவது கொஞ்சம் காட்டி உள்ளார்களே என்று பார்த்து திருப்தி அடைந்தேன்..சிறந்த படம்...தங்களது விமர்சனமும் வழக்கம் போல அருமை.என் நன்றிகள்..
ReplyDelete.சஸ்பிஷன் ஒரு பார்வை - ஒரு ஹிட்ச்காக் திரை படைப்பு.
உங்கள் எண்ணத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே !
Delete