தமிழ்த் திரைப் படங்களின் தொழில் நுட்ப தரத்தை உலக தரத்துக்கு இணையாக இல்லை உலக தரத்தை விட அதிகமாக கொண்டு சென்ற தயாரிப்பாளர், இயக்குனர் கமல் ஹாசனுக்கு தனி பாராட்டு. இதை விட தமிழ் ரசிகர்கள் புத்திசாலிகள் என்று நம்பிக்கை வைத்ததற்காக உலக நாயகனை சத்தமாகவே பாராட்டலாம்.
கதக் நடன ஆசிரியராக வரும் கமல் அப்படியே நடனக் கலைஞரை பிரதிபலிக்கிறார் - நளினத்தோடு ஓடுவதாகட்டும், அடி படும் போது கத்துவதாகட்டும். அப்படி பட்ட கமல் ஒரு கண நேரத்தில் அதிரடிக்கு மாறுவது நடிகர் கமலின் வெற்றி. ஒரு காட்சியில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் சொட்டுகிறது. அடுத்த முறை தண்ணீர் சொட்டுவதற்கு முன் ஒரு 10 பேரை சாய்த்து விடுகிறார் கமல். என்ன நடந்தது என்று நாம் மட்டுமல்ல, படத்தில் அவர் மனைவியும் நினைத்து பார்க்கையில் ஸ்லோ மோஷனில் திரும்பவும் காட்சிகள் வருகிறது. இது திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் கமலின் வெற்றி.
பொருத்தமாக "யார் என்று தெரிகிறதா?" பாடலும் ஒலிக்கிறது. கமலுடைய கதாபாத்திரத்துக்கு எழுதியதை விட, கவிஞர் வைரமுத்து , கமலுக்கே எழுதியது போல தோன்றுகிறது இந்த பாடல். இன்னொரு பாடலான "உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே" என்கிற பாடல் மிக மிக இனிமை. கமல் எழுதியிருக்கிறார் இந்த பாடலை, அவர் தேர்ந்த கவிஞர் என்பதுக்கு பாடலே சாட்சி.
கதையை ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவிலும் மட்டுமே படமாக்கி இருக்கிறார். நுணுக்கம் படம் முழுவதும் நிறைந்து இருக்கிறது - கொஞ்சம் கவனிக்காவிட்டாலும் படம் புரியாது, இல்லை எதாவது ரசிக்கத் தக்க விஷயம் விடப் பட்டு விடும். போர் என்று வரும்போது அமெரிக்க தரப்பும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் தரப்பும் ஒருவருக்கு ஒருவர் செய்யும் அட்டூழியங்களும் அப்படியே தரப்பட்டு இருக்கிறதோ என்றும் தோன்றும் வகையில் காட்சிகள் அமைந்து இருக்கின்றன. போரின் கொடூரங்களை அப்படியே காட்டி இருக்கிறார் கமல். டாக்டராக வேண்டும் என்கிற சிறுவன், இன்னும் மனதளவில் குழந்தையாக இருக்கிற சிறுவன் என்று சிறுவர்களின் வாழ்க்கைகளின் பாதிப்புகள், டாக்டராக வருகிற வெளிநாட்டு பெண் அமெரிக்க தாக்குதலில் கொல்லப் பட்டு விடுவது என்று சின்னது முதல் பெரிய சம்பவங்கள் சொல்லப் பட்டு இருக்கின்றன. எதுக்கு எது காரணம் அல்லது பலன் என்று நினைக்க வேண்டிய பொறுப்பை ரசிகர்களிடம் விட்டு விட்டு படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
விசாம் அஹமது கஷ்மீரி என்ற பெயரில் தீவிரவாதிகளுடன் சேர வரும் கமலை, அவரை பற்றி ஒன்றுமே தெரியாத போது, எப்படி அவ்வளவு எளிதாக அந்த தீவிர வாதிகள் அவர்களுள் ஒருவராக எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்பது கொஞ்சம் லாஜிக் உதைக்கிற விஷயம். என்ன தான் அவர் அப்பா தீவிரவாதிகளின் முக்கிய புள்ளியாக இருந்தாலும் பையனையும் அப்படியே நினைப்பார்களா என்ன? பிரதமர் மன்மோகன் சிங் கமலிடம் நேரடியாக போனில் பேசுவது போல் வரும் காட்சி கொஞ்சம் மிகையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
படத்துக்கு முற்றும் போடாமல் தொடரும் மட்டும் போட்டிருக்கிறார், அடுத்த பாகம் எப்படி வருகிறது என்று பார்க்கலாம்...
எப்படியோ வியாபார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கருத்து அளவிலும் வெற்றி பெரும் வகையில் படத்தை தந்து எடுத்த ரிஸ்கில் ஜெயித்து விட்டார் கமல். இயக்குனராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக கமலின் விஸ்வரூபம் தான் இது.