ரிஷி 'பிரஜாபதி பரமேஷ்டி' சிருஷ்டி பற்றிச் சொன்ன ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் என்னும் மகத்தான பாடல்.
*
சிருஷ்டி கீதம்
===========
அப்போது அசத் இருக்கவில்லை
சத்தும் இருக்கவில்லை
உலகம் இருக்கவில்லை
அதற்கப்பால்
வானமும் இருக்கவில்லை
ஒளிந்துகிடந்தது என்ன?
எங்கே?
யாருடைய ஆட்சியில்?
அடியற்ற ஆழமுடையதும்
மகத்தானதுமான நீர்வெளியோ?
மரணமிருந்ததோ
மரணமற்ற நிரந்தரமோ?
அப்போது இரவுபகல்கள் இல்லை
ஒன்றேயான அது
தன் அகச்சக்தியினால்
மூச்சுவிட்டது
அதுவன்றி ஏதுமிருக்கவில்லை
இருட்டால் போர்த்தப்பட்ட வெளி
வேறுபடுத்தலின்மையால்
ஏதுமின்மையாக ஆகிய வெளி
அது நீராக இருந்தது
அதன் பிறப்பு
வெறுமையால் மூடப்பட்டிருந்தது!
தன் முடிவற்ற தவத்தால்
அது சத்தாக ஆகியது
அந்த ஒருமையில்
முதலில் இச்சை பிறந்தது
பின்னர் பீஜம் பிறந்தது
அவ்வாறாக அசத் உருவாயிற்று!
ரிஷிகள்
தங்கள் இதயங்களை சோதித்து
அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்
அதன் கதிர்கள்
இருளில் பரந்தன
ஆனால் ஒருமையான அது
மேலே உள்ளதா?
அல்லது கீழே உள்ளதா?
அங்கு படைப்புசக்தி உண்டா?
அதன் மகிமைகள் என்ன?
அது முன்னால் உள்ளதா?
அல்லது பின்னால் உள்ளதா?
திட்டவட்டமாக யாரறிவார்?
அதன் மூலக்காரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும் அது?
அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
ஆகாய வடிவான அதுவே அறியும்
அல்லது
அதுவும் அறியாது!
அறியவொண்ணாமையின் பிரமிப்பால் மட்டுமே சென்று தீண்டச்சாத்தியமான அந்த ஒன்றை இங்கே பெயர் சுட்டக்கூட கவிஞன் முயலவில்லை. மீண்டும் மீண்டும் பிரமிப்பின் வினாக்களே அதை நோக்கி நீள்கின்றன. 'வ்யோமன் த்ஸோ அங்க வேத யதி ! வா ந வேத!' என்று சொல்லிமுடிக்கும் கவித்துவ உச்சத்தில் அப்பிரமிப்பே ஒரு இருப்பாக மாறி தன்னை நிறுவிக்கோண்டுவிடுகிறது.
அந்தப்பிரமிப்புக்கு அளிக்கப்பட்ட ஒலியே 'பிரம்ம' என்பது. 'அம்ம!' என்ற ஒலிக்கு நிகராதுதான் அது. பெரியது, ஆச்சரியத்துக்குரியது, அச்சம் தருவது என்றெல்லாம் பிரம்மம் என்னும் ஒலி பொருள்கொள்ளப்படுகிறது. என்றாலும் அது எப்போதும் அதையே குறிக்கிறது. அலகிலாதது, அறியமுடியாமை என்ற அறிவை மட்டுமே அளிப்பது, இருப்பது , இருப்பின்மையாலேயே இருப்பை அறிய முடியாதது.
அதைச்சொல்ல நேதி நேதி நேதி என்று அனைத்தையும் மறுக்க வேண்டும். அல்லது ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்று அனைத்தையும் ஏற்கவேண்டும். தத்வமசி என்று வெளியே சுட்டவேண்டும் . அஹம்பிரம்மாஸ்மி என்று தன்னைச்சுட்டவேண்டும். முரண்பாடுகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் ஒரு முடிவின்மை அது.
No comments:
Post a Comment