பதினேழாம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சைகள் முடி திருத்தகத்தின் பின் பகுதியில் இருந்த இருண்ட அறையில் செய்யப்பட்டன. மயக்க மருந்து என்பது கண்டு பிடிக்கப் படாத காலம் அது. கத்தியால் மருத்துவர் வெட்டும் போது நோயாளி அசைந்து விடாமல் இருக்க தோல் வார் போட்டு இறுகக் கட்டிவிடுவார்கள், கட்டிலோடு. மருத்துவர் கத்தியால் வெட்டும் போதோ, தையல் போடும் போதோ சிலர் கதறி துடித்து விடுவார்கள், சில பெண்கள் ஒரு சத்தம் கூட எழுப்பாமல் சிகிச்சையை முடித்து விடுவார்கள். சில சமயங்களில் இரும்பு கத்தியை பழுக்க காய்ச்சி வெட்டுவார்கள், அரிக்கக் கூடிய அமிலங்கள் பயன்படுத்தப் பட்டன. அமிலங்கள் பயன் படுத்தும் போது ஒரு சொட்டு உடலில் வேறு இடத்திலோ காயத்திலோ பட்டால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. மயக்க மருந்து இல்லாததைப் போல நோய் தோற்று இல்லாமல் இருக்க ஆண்டி-செப்டிக் (anti-septic) எதுவும் இல்லை. ஒருவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து வருவது அதிசயம் தான். வெட்டும் போது, தைக்கும் போது நோயாளி கத்துவதையும் கதறுவதையும் பொருட் படுத்தாமல் மனதை திடப் படுத்திக் கொண்டு மருத்துவர்கள் அதை செய்து வந்தார்கள்.
பதினேழாம் நூற்றாண்டில் ஸ்கொட்லாந்து அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் ஹன்டர் கான்சர் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி கொண்டு இருந்தார். அவர் கான்சர் கட்டி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகருமானால் அதை உடலில் இருந்தே வெளியே நகர்த்துவது சாத்தியமே என நினைத்தார். பல வருடங்கள் அறுவை சிகிச்சை செய்ததாலே அவர் ஒரு விஷயத்தை கவனித்தார். அதன் அடிப்படையில் நகரக் கூடிய கட்டிகள், நகராத கட்டிகள் என்று பிரிக்க ஆரம்பித்தார். கான்சரை பாகுபாடு செய்ய வேண்டும் என்று முதலில் செய்தவர் அவரே. இன்று கான்சரின் முதலும் அடிப்படையுமான ஒன்று அதை பாகுபாடு செய்வதே.
No comments:
Post a Comment